கண்மூடித்தனமான தொடர் வேட்டையின் காரணமாக கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்ட வங்கப் புலிகளின் எண்ணிக்கை தென்னிந்திய காடுகளில் தற்போது மெல்ல மீண்டெழுந்து வருகின்றன. உலகில் வங்கப் புலிகள் அதிகம் வாழும் பகுதிகளாக தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இந்த மூன்று மாநிலங்களை உள்ளடக்கிய வனப்பரப்பு விளங்கி வந்தாலும், அவற்றுக்கான வாழிடப்போதாமை என்பது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.

கர்நாடகாவின் பந்திப்பூர் , நாஹரோலே புலிகள் காப்பக சுற்றுவட்டாரப் பகுதிகளில் புலி- மனித எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. புலிகளால் ஏற்படும் கால்நடைகளின் இழப்பைத் தாண்டி கடந்த இரண்டு மாதங்களில் மூன்று விவசாயிகள் புலி தாக்குதல்களால் உயிரிழந்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து புலிகளைப் பிடிக்கும் பணியில் இறங்கிய கர்நாடக வனத்துறையினர் ஒரே மாதத்தில் 20 புலிகளுக்கு மேல் பிடித்திருக்கிறார்கள். இதில் 16 குட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது.