சென்னை:
நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார். கட்சிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். வருகிற 2026 சட்ட மன்ற தேர்தலை எதிர்நோக்கி கட்சியின் செயல்பாடுகள் நடைபெற்று வருவதாக ஏற்கனவே விஜய் தெரிவித்து இருந்தார்.
கட்சியின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தால் மாநாடு நடக்கும் தேதி அறிவிப்பு தொடர்ந்து தள்ளிப்போனது.
நெற்றியில் குங்குமம்
இந்த நிலையில் கட்சியின் முதல் மாநாடு விக்கிர வாண்டியில் நடைபெறும் என்று இன்று காலை(20&ந்தேதி) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளார். வழக்கமாக த.வெ.க.கட்சியின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் வெளியாகும் கடிதத்தில் நடிகர் விஜய் சிரித்த முகத்துடன் நெற்றியில் குங்கும் இருக்கும்.
ஆனால் இன்று வெளியான அறிக்கையின் போது கட்சியின் கடிதத்தில் விஜய்யின் படம் மாற்றப்பட்டு இருந்தது. அதில் அவரது நெற்றியில் இருந்த குங்கும் நீக்கப்பட்டு இருந்தது. இது தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
பெரியார் சிலைக்கு மரியாதை
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விஜய் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு திடீரென சென்று பெரியாரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தி.மு.க., அ.தி.-மு.க. உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றன. தமிழக அரசியலை பெரியாரை தொடமால் செய்யமுடியாது என்று தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் த.வெ.க.கட்சியின் அதிகாரப்பபூர்வ கடிதத்தில் விஜய்யின் நெற்றியில் குங்குமம் இல்லாத படம் இடம்பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நடிகர் விஜய், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வாழ்த்து சொல்லாததும் விமர்சனத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
மாநாடு அறிக்கை
நடிகர் விஜய் விக்கிரவாண்டி மாநாடு தொடர்பாக வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே,
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது.
கழகக் கொடியேற்று விழாவின்போது, நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம்.
நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி (27.10.2024), மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது.
தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே நடந்துவரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பதையும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
விரைவில் சந்திப்போம்
இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்!
இந்நிலையில், நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக, தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன்.
விரைவில் சந்திப்போம்!!
வாகை சூடுவோம்!!
அன்புடன், விஜய்
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.