ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்தியக் கிழக்கு நாடுகளில் போர் பரவியது. அதனால், உலக நாடுகளுக்கு மத்தியில் நடைபெற்ற எண்ணெய், எரிபொருள் விற்பனை சிக்கலை சந்தித்தது. அதன் காரணமாக இந்தியா முழுவதும், இயற்கை எரிவாயு விநியோகத்தை உறுதி செய்வதற்காக, 1955-ம் ஆண்டின் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் என்பது பொதுமக்களுக்கு அவசியமானதாகக் கருதப்படும் குறிப்பிட்ட பொருட்களின் உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்த இயற்றப்பட்ட ஒரு மையச் சட்டமாகும். இது நியாயமான விலையில் சமமான விநியோகத்தை உறுதி செய்யும் அதே வேளையில், பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தைப்படுத்தலைத் தடுக்கவும் வழிவகுக்கும்.
இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் நிலையான கிடைப்பை உறுதி செய்யவும், செயற்கையான பற்றாக்குறையைத் தடுக்கவும், இந்தப் பொருட்கள் வாங்கப்படும் அல்லது விற்கப்படும் விலைகளை ஒழுங்குபடுத்தவும் இந்த சட்டம் செயல்படுத்தப்படும். இந்த அத்தியாவசியப் பொருள் என்ற வரையறைக்குள் சட்டத்தின் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு பொருளையும் குறிக்கிறது.