M.K Stalin : 50,818 வாக்குகள் எழுதிய வரலாறு: ஸ்டாலினுக்கு சோதனை களமாக அமைந்த ஆயிரம் விளக்குத் தொகுதி! | MK Stalin-a-series-on-leaders-first-election-in-tamilnadu

Spread the love

இந்த நிலையில்தான், 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதன்முதலாக சென்னை,  ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார் ஸ்டாலின். ஆனால், வெற்றி பெறவில்லை. அந்தத் தேர்தலில், திமுக மொத்தமே 24 இடங்களில்தான் வெற்றி பெற்று இருந்தது. அப்போது உடல் நலம் குன்றியிருந்த எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக வீசிய அனுதாப அலை, இந்தத் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்ததாக திமுக தலைவர்கள் கருதினர்.

எனவே, 1989-ல் மீண்டும் ஸ்டாலினை அதே தொகுதியில் நிறுத்த  முடிவு செய்தது திமுக தலைமை. இந்த முடிவு வெறும் அடையாளத்துக்கானதாகவோ அல்லது தற்செயலான ஒன்றாகவோ இருக்கவில்லை. மாறாக, கட்சியின் எதிர்காலத்தை வடிவமைக்க இருக்கும் தலைவருக்கு ஏற்ற சோதனை களமாகவே ஆயிரம் விளக்கு தொகுதியை, கட்சித் தலைவர் கருணாநிதி உள்ளிட்ட மூத்த தலைவர்கள்  கருதினர். 

நடுத்தர வர்க்கக் குடும்பங்கள், தொழிலாளர் வகுப்பினரின் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் எனக் கலந்திருந்த இந்தத் தொகுதி, இளைஞர்களை ஒன்றுதிரட்ட வசதியாகவும், நகர்ப்புறப் பொது பிரச்னைகளை எழுப்பக்கூடியதாகவும் இருந்தது. இவை இரண்டும், ஸ்டாலினின் முக்கிய பலமாக இருந்தவை. கருணாநிதியும் திமுக உயர்மட்டத் தலைமையும் ஸ்டாலினின் அமைப்புப் பணி, குறிப்பாக இளைஞர் அணிச் செயலாளராக நீண்ட காலம் செயல்பட்டது, இரண்டாவது கட்டத்துக்கு அவரைத் தயாராக்கி விட்டதாக நம்பினர். இந்த நிலையில், அப்போதைய காலகட்டத்தில் இயல்பாகவே சென்னை மாநகரத்துக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள், திமுகவுக்குப் பலம் வாய்ந்த தொகுதிகளாகவே இருந்தன. 

இந்த நிலையில், எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாக பிளவுபட்டிருந்த ஒரு சூழலில், அடுத்து ஆட்சி அமைக்கப்போவது திமுகதான் என்கிற பேச்சு, தேர்தலுக்கு முன்னதாகவே எழுந்தது. ஊடகங்களிலும் அதே கருத்து பிரதிபலிக்கப்பட்ட நிலையில், ஸ்டாலினை மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் நிறுத்துவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது என திமுக மேலிடம் கருதியது. 

அது உண்மைதான் என்பது தேர்தல் முடிவில் நிரூபணமானது. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி 169 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், திமுக மட்டும் 150 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஸ்டாலின் 50,818 வாக்குகள் பெற்று, அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக ஜெ.பிரிவு வேட்பாளரான தம்பிதுரையை 20,634 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். திமுகவுக்கு சென்னையில் கிடைத்த மிகத் தெளிவான, மிகப் பெரிய நகர்ப்புற வெற்றியாக இது பதிவானது. இந்தப் பின்னணியால்தான், 1989-ல் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்பது, “புதிதாக வந்தவரின் எழுச்சி’ போலத் தெரியாமல், நீண்ட காலம் பயிற்சி பெற்ற அரசியல் மாணவனின் இயல்பான பட்டமளிப்பு நிகழ்வு போலவே தெரிந்தது.

ஆயிரம் விளக்கு தொகுதி, ஒரு நகர்ப்புறத் திராவிட அடையாளத்தைக் கொண்டிருந்தது. கல்வி, பொது பங்களிப்பு, சமூக நீதி ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தியதால், திமுக இங்கே ஆழமான, உறுதியான ஆதரவுத் தளத்தை உருவாக்கியிருந்தது. அந்த வகையில், தனது கட்சிக்கான இரண்டாம் தலைமுறைத் தலைவரை இந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்தன் மூலம், ஒரு தெளிவான செய்தியை வெளியுலகுக்கு திமுக சொல்லியது. 

அதே நேரம் மாநில அரசியல் ,பெரிய ஆளுமைகளின் ஆதிக்கத்தில் இருந்த காலகட்டத்தில் இளம் தலைவர்களை முன்னிறுத்த கட்சி தயாராக இருக்கிறது என்பதையும் அது அறிவித்தது. ஸ்டாலினைப் பொறுத்தவரை இந்தத் தொகுதி, சென்னையின் அரசியல் உணர்வு மிக்க மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *