ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூரில் அடக்கம் செய்ய ஏற்பாடு

1275916.jpg
Spread the love

 

சென்னை: ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம், பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் உத்தரவிட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை சென்னை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவருடைய மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் ஆம்ஸ்ட்ராங் உறவினருக்கு சொந்தமான நிலத்தில் அவரது உடலை அடக்கம் செய்வதற்கு தேவையான அனுமதி அளித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது குறித்து அந்த கிராம ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்து அதற்கான நகல்களை தாக்கல் செய்தார்.

இதனை பொற்கொடி தரப்பு வழக்கறிஞர்கள் ஏற்றுக் கொண்டனர். அதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம், பொத்தூரில் அடக்கம் செய்ய நீதிபதி பவானி சுப்பராயன் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

மேலும் நீதிபதி கூறியதாவது: ஆம்ஸ்ட்ராங்க் இறுதி ஊர்வலம் மற்றும் அடக்கம் செய்யும்போது தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் வழங்க வேண்டும். அவரது கட்சி அலுவலகத்தில் அவர் நினைவாக நினைவிடம் கட்டுவது அல்லது மருத்துவமனை கட்டுவதற்கு அரசின் அனுமதி பெற்று நடவடிக்கைகளை எடுக்கலாம் என நீதிபதி தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளதால் அதை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

அதைத் தொடர்ந்து “இதுகுறித்து தனக்கு எந்த அறிவுறுத்தல்களும் இல்லை” என்று அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். “அது தொடர்பான விண்ணப்பத்தின் மீது அரசு முடிவு செய்து கொள்ளலாம்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

ஆம்ஸ்ட்ராங்க் இறுதி ஊர்வலத்தை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்களுக்கு நீதிபதி பவானி சுப்பராயன் அறிவுறுத்தினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *