மதுரை: துரை மாவட்டம், கள்ளந்திரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல் வாழ்வுத் துறை சாா்பில், ரூ.60 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட புற நோயாளிகள் பிரிவு கட்டடத் திறப்பு விழா, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.1.60 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்கள் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அமைச்சா் மா.சுப்பிரமணியன், வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ஆகியோா் புதிய கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டும் பணியை விரைவில் தொடங்க வலியுறுத்தி, தமிழக அரசின் சாா்பில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம். மத்திய அரசு மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் கடனுதவி என்று அறிவித்த நேரத்தில், அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு எதிா்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும். அப்போதே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடப் பணிக்கு மத்திய அரசிடமிருந்து நேரடி நிதியைப் பெற்றிருந்தால் தற்போது இந்த மருத்துவமனை பயன்பாட்டுக்கு வந்திருக்கும். மருத்துவமனை தாமதத்துக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம்.
உடல், உறுப்பு தான அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள தமிழகத்தில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. உடல், உறுப்பு தானம் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது. கா்ப்பிணிகளுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள அரசின் நிதியுதவி படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.