Maharashtra government decides to send 50 captured leopards to Ambani’s Vandara Zoo – பிடிபட்ட 50 சிறுத்தை புலிகளை அம்பானியின் வந்தாரா உயிரியல் மையத்திற்கு அனுப்ப மகாராஷ்டிரா அரசு முடிவு

Spread the love

மகாராஷ்டிராவில் சிறுத்தை புலிகள் அடிக்கடி பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்குள் வந்து இரைதேடுகின்றன. இதனால் அவற்றை வனத்துறை அதிகாரிகள் பிடித்து கூண்டில் அடைத்து வைத்திருக்கின்றனர். அவ்வாறு பிடிக்கப்படும் சிறுத்தை புலிகள் பின்னர் வனப்பகுதியில் விடப்படுவது வழக்கம். ஆனால் அவ்வாறு பிடிபட்ட சிறுத்தை புலிகளை மாநில வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கூண்டில் அடைத்து வைத்திருக்கின்றனர். அவற்றை தொடர்ந்து பராமரிப்பதில் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் சிறுத்தை புலிகளில் 50ஐ குஜராத்தில் இருக்கும் அம்பானியின் வந்தாரா உயிரியல் மையத்திற்கு அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மாநில வனத்துறை அமைச்சர் கணேஷ் நாயக் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், “கூண்டில் அடைக்கப்பட்டுள்ள சில சிறுத்தைபுலிகள் குஜராத்தில் உள்ள ஜாம்நகர் வந்தாரா உயிரியல் மையத்திற்கு அனுப்பப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வந்தாரா விலங்குகள் மையம்

வந்தாரா விலங்குகள் மையம்

மனித-விலங்கு மோதலை குறைக்க பிடிபட்ட 67 சிறுத்தைகள் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படும் என்றும், அவற்றில் 50 சிறுத்தைகள் வந்தாராவிற்கு மாற்றப்படும் என்றும் வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த முடிவை விலங்குகள் நல ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இது குறித்து நாண்டெட்டை சேர்ந்து விலங்குகள் நல ஆர்வலர் நிதின் கூறுகையில், “‘சிறுத்தைபுலிகளை இவ்வாறு உயிரியல் பூங்காவிற்கு அனுப்புவது தவறு. இந்த வேட்டையாடும் சிறுத்தை புலி இனங்களை அதன் சொந்த வன வாழ்விடங்களில் வளர அனுமதிக்கவேண்டும். அவற்றை ஒரு சிறிய மிருகக்காட்சிசாலை அல்லது வனவிலங்கு மையத்திற்கு அனுப்புவது இதற்கு தீர்வாகாது. கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள 21 சிறுத்தைபுலிகளை வனப்பகுதியில் விடும்படி கடந்த 3 மாதங்களாக வனத்துறை அதிகாரிகளிடம் கோரி வருகிறேன். ஆனால் அவர்கள் அதற்கு தயாராக இல்லை. வனப்பகுதியை மனிதர்கள் ஆக்கிரமிப்பதால் வனவிலங்குகள் வாழ போதிய இடம் கிடைப்பதில்லை”என்று தெரிவித்தார்.

வனசக்தி என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருபவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான டி.ஸ்டாலின் இது குறித்து கூறுகையில்,”மனித-விலங்கு மோதல் பிரச்சினையைத் தவிர, சிறுத்தை புலிகள் காடுகளின் இயற்கையான பாதுகாவலர்கள் என்பதால், காடுகளுக்குள் சுதந்திரமாக சுரங்க பணிகளை மேற்கொள்ள பல சிறுத்தைகள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதாக உணர்கிறேன். முன்னதாக, சிறுத்தைகளை கருத்தடை செய்ய ஒரு வினோதமான திட்டம் இருந்தது” என்று கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *