Maharashtra Muslim Minister Enters Hindu Temple and Worships: Controversy over sanctifying temple with gomyam | இந்து கோயிலில் வழிபட்ட மகாராஷ்டிரா அமைச்சர்

Spread the love

மகாராஷ்டிராவில் அமைச்சராக இருப்பவர் அப்துல் சத்தார். சிவசேனாவை சேர்ந்த அவர் மகா சிவராத்திரியையொட்டி மகாராஷ்டிராவில் உள்ள சத்ரபதி சாம்பாஜி நகரில் இருக்கும் ரஹிமாபாத் என்ற இடத்தில் இருக்கும் நாகேஷ்வர் கோயிலுக்கு வந்தார். அவர் கோயிலுக்குள் சென்று வழிபட முயன்றார். அதற்கு உள்ளூர் பிரமுகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இஸ்லாமிய அமைச்சரான அப்துல் சத்தார் அசைவம் சாப்பிடாமல் வீட்டை விட்டு வெளியில் வரமாட்டார் என்றும், எனவே அவரை கோயிலுக்குள் விடமாட்டோம் என்றும் தெரிவித்தனர். ஆனால் அவர்களின் எதிர்ப்பை மீறி அப்துல் சத்தார் கோயிலுக்குள் சென்று வழிபட்டார்.

அவர் கோயிலுக்குள் சென்று வழிபட்டுவிட்டு சென்ற பிறகு கோயில் மாசுபட்டுவிட்டதாக உள்ளூர் இந்து அமைப்பினர் குற்றம்சாட்டினர். அதோடு கோயிலை புனிதப்படுத்தவேண்டும் என்று சிலர் பேசிக்கொண்டனர். இதையடுத்து ஒருவர் கோயில் முழுவதும் கோமியம் தெளித்து புனிதப்படுத்துவதாக தெரிவித்தார்.

அவர் கோயிலில் கோமியம் தெளிக்கும் வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. இச்சம்பவத்தால் கோயிலுக்கு வெளியில் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கோயிலை கோமியம் கொண்டு புனிதப்படுத்தி இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. ஆனால் இச்சம்பவம் குறித்து அமைச்சர் அப்துல் சத்தார் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அதே சமயம் சிவசேனாவை சேர்ந்த துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இச்சம்பவம் குறித்து அளித்த பேட்டியில், “இது துரதிஷ்டவசமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “‘கோயிலுக்கு கோமியம் தெளித்து புனிதப்படுத்தியது கண்டிக்கத்தக்கது. அப்துல் சத்தார் எங்களது கட்சி எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர். தேசத்திற்கு எதிராக பேசுபவர்கள் எங்களுக்கும் எதிரி” என்று குறிப்பிட்டுள்ளார். அதே சிவசேனாவை சேர்ந்த மூத்த தலைவர் சஞ்சய் நிரூபம் `முஸ்லிம் அமைச்சர் இந்துகோயிலுக்குள் சென்று வழிபட்டதில் தவறில்லை. சிவன் அனைவருமானவர்” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *