XUV7XO காரைப் பற்றி முக்கியமான சில ஹைலைட்ஸ் பார்க்கலாம்!
AX, AX5, AX7 என சுமார் 27 வேரியன்ட்களில் இந்தக் காரைக் கொண்டு வந்திருக்கிறது மஹிந்திரா. இது XUV7OO காரா என்று கண்டுபிடிக்கவே முடியாது. அப்படி மொத்தமாக மாறியிருக்கிறது XUV7OO. அதாவது புது XUV7XO. ரீ-டிசைன் செய்யப்பட்ட முன் மற்றும் பின் பக்க பம்பர்கள், புது ஸ்டைலில் அலாய் வீல்கள் என்று ரோடு பிரசன்ஸில் அசத்துகிறது XUV7XO.
ஸ்ப்ளிட் செய்யப்பட்ட எல்.இ.டி ஹெட்லைட்கள் செம ஸ்டைல். கார்னரிங் மற்றும் பனிவிளக்குகள், ஐஸ் க்யூப் வடிவத்தில் க்யூட்டாக இருக்கின்றன. இதில் ஒரு விசேஷம் உண்டு. 80 கி.மீ வேகத்துக்கு மேலே போனால், இது ஒரு ஹெட்லைட் பூஸ்ட்டராகச் செயல்பட்டு, எக்ஸ்ட்ரா வெளிச்சத்தைப் பீய்ச்சுமாம். ஆனால், இது ஹைபீமில் மட்டும்தான் வேலை செய்யும். அதனால், இரவு நேரங்களில் ஹைவேஸில் செல்லும்போது விசிபிலிட்டி குறைபாடு இருக்காது.
இந்தக் காரில் வசதிகளை வாரித் தெளித்திருக்கிறது மஹிந்திரா. அடாஸ் லெவல் 2, பெரிய பனோரமிக் சன்ரூஃப், டேஷ்போர்டு முழுதும் நீளும் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், முன் பக்கத்தில் பவர்டு மெமரி மற்றும் வென்ட்டிலேட்டட் சீட்கள், 2 ஸ்போக் மல்ட்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், முன்பக்கப் பயணியின் சீட்டின் பின்னால், ஒரு ஸ்க்ரீன் எனக் கலக்குகிறது. டாப் மாடலில் 19 இன்ச் அலாய்; மிட் வேரியன்ட்டில் 18 இன்ச் அலாய் வீல்கள் இருக்கின்றன. புது டிசைனில் இருக்கின்றன இவை. XEV 9S காரில் இருப்பதுபோல், பின் பக்க டெயில்லைட்கள் இருக்கின்றன.