சென்னை:
சென்னையில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது மேயர் பிரியாவின் தபேதாராக இருந்த மாதவியின் இடமாற்றம் தான். சாதாரண லிப்ஸ்டிக் இந்த அளவுக்கு சர்ச்சை ஆகி டிரான்ஸ்பர் வரை போகும் என்று யாரும் எதிர்பார்க்க வில்லை.
மேலும் இந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் தற்போது பேசும் பொருளாக மாறி இருக்கிறது. பலர் இந்த பிரச்சினையை படித்து சிரித்த படி என்னத்த சொல்ல… இதுவும் நடக்கும்… இதுக்கு மேலவும் நடக்கும்…என்று தலையில் அடித்தபடி செல்கிறார்கள்.
முதல் பெண் தபேதார்
சென்னை மேயர் பிரியாவின் தபேதாராக இருந்தவர் மாதவி (50). சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் என்பது குறிப்பிடத்தக்கது. மேயர் செல்லும் இடங்களில் அரசு சம்பந்தமாக கூட்டங்கள், நிகழ்ச்சிகளுக்கு செல்வோர் தபேதார் சீருடையில் இருக்கும் மாதவி தனது உதட்டுக்கு லிப்ஸ்டிக் பூசிக் கொண்டு வருவதை வழக்கமாக கொண்டதாக தெரிகிறது.
பிரபல நிறுவன மருந்து, மாத்திரைகளில் போலி; ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
எந்நேரமும் பரபரப்புடன் மேயர் பிரியா செல்லும் போது அவரது முன்னே மாதவியும் அதே லிப்ஸ்டிக் பூசி பந்தாவாக சென்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும், மகளிர் தினத்தின் போது மாநகராட்சி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பேஷன் ஷோவில் மாதவி கலந்து கொண்டது பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளதோடு விமர்சனங்களை எழுப்பியதாகவும் தெரிகிறது.
மேயருக்கே டப்
அவரின் இதுபோன்ற நடவடிக்கைகளை அறிந்த மேயரின் தனி உதவியாளர் ஒருவர் மாதவியை அழைத்து விளக்கம் கேட்டு உதட்டுக்கு சாயம் பூசிக் கொண்டு வருவது கூடாது என்றும் அவர் கண்டித்துள்ளார். மேயருக்கே டப் கொடுத்ததால் இந்த கண்டிப்பு என்று தெரிகிறது. ஆனால் தனி உதவியாளரின் பேச்சை கண்டு கொள்ளதா மாதவி உதட்டுச்சாயத்துடன் பந்தாவாக உலா வந்ததாக தெரிகிறது.
இதையடுத்து, அவர் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரி, ஆகஸ்ட் 6ம் தேதி மெமோவும் வழங்கப்பட்டது. அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கீழ்படியவில்லை, என்ன காரணம் என்று கூறுமாறு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு பதில் அளித்த தபேதார் மாதவி, இது போன்ற அறிவுறுத்தல்கள் மனித உரிமைக்கு எதிரானது. யாரிடமும் பேசக்கூடாது, உதட்டுச்சாயம் அணியக்கூடாது என்று எந்த அரசாங்க உத்தரவும் இல்லை. அதுபோன்ற உத்தரவுகள் இருந்தால் காட்டுங்கள் என்று கூறி எகிறி உள்ளார். அதையே தமது விளக்கமாகவும் மேயரின் உதவியாளருக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது.
பணியிட மாற்றம்
இதைத்தொடர்ந்து மாதவியின் விளக்கத்தை ஏற்க மறுத்து, அவரை உடனடியாக மணலிக்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஒரு லிப்ஸ்டிக் உதட்டுச்சாயம் பணியிட மாற்றம் வரை சென்றுவிட்டதே என்று பேசுபொருளாக மாறி விட்டது.