ஐதராபாத்,ஜன.18-
ஐதராபாத் எல்.பி.நகரில் உள்ள காமினேனி மருத்துவமனையில் ஒருவரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட இதயத்தை லக்டி-&ஹா&புல் பகுதியில் உள்ள க்ளெனகிள்ஸ் கோபால் மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நோயாளி ஒருவருக்கு பொருத்த டாக்டர்கள் முடிவு செய்தனர். ஆனால் இந்த இடத்தை கடந்து செல்ல உள்ள சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்தை போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலை வழியாக குறிப்பிட்ட நேரத்திற்குள் இதயத்தை கொண்டு செல்வது சவாலாக மாறியது.
இதையடுத்து இதயத்தை விரைந்து கொண்டு செல்ல மெட்ரோ ரெயில் நிர்வாகத்தினரின் உதவியை நாடினர் டாக்டர்கள்.
இதைத்தொடர்ந்து மெட்ரோ ரெயில் நிர்வாகத்தினரும் இதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்தனர். அடுத்த சில நிமிடங்களில் பாதுகாப்பான பெட்டியில் எடுத்து வரப்பட்ட இதயத்துடன் வந்த டாக்டர்கள் குழுவினர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர். அவர்கள் 13-கிமீ தூரம் பயணித்து 13 நிலையங்களைக் வெறும் 13 நிமிடங்களில் கடந்து தங்களது மருத்துவமனையை சரியான நேரத்திற்குள் அடைந்தனர்.அங்கு நோயாளிக்கு வெற்றிகரமாக இதயமும் பொருத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சிறப்பு ஏற்பாட்டால் 13 கி.மீ தூரத்தை 13 நிமிடங்களில் கடந்து, தக்க சமயத்தில் இதயத்தை மருத்துவமனையில் கொண்டு சேர்த்த டாக்டர்களின் மெட்ரோ ரெயில் பயண வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.