கேம் சேஞ்சரா ஆர்சிபிக்கு மாறிட்ட சுயாஸ் ஷர்மாவை முன்னெச்சரிக்கை முத்தண்ணாவா கூட்டிட்டு வந்து ஒரே ஓவர்ல ஆர்சிபி எடுத்த அந்த இரு விக்கெட்டுகளும் ஆட்டத்தோட முக்கியத் திருப்புமுனை. இருந்தாலும், என்னதான் விக்கெட்டுகள் விழுந்தாலும் ரன்ரேட்டை 10-க்கு கீழே இறங்காம மும்பை பார்த்துக்கிடுச்சு. பிரச்சனை என்னன்னா வெறும் 200 இலக்குனா இந்த வேகம் போதும், ஆனா 241-ஐ எட்டனும்ன்றபோ, ஆரம்பத்துலயே தேவைப்படற ரன்ரேட் 12-ன்றப்போ இந்த வேகம் போதல. ரிலேல இறுதி ரவுண்ட் மாதிரி இறுதி 10 ஓவர்கள்ல ரன்ரேட்டை இரட்டிப்பாக்கி இருக்கனும். அத மும்பை செய்யத் தவற பட்ஜெட்ல மாசமாசம் வரவுக்கும் செலவுக்குமான இடைவெளி அதிகரிக்கற மாதிரி ஓவருக்கு ஓவர் பந்துக்கும் தேவைப்படற ரன்களுக்குமான இடைவெளி எகிற ஆரம்பிச்சது.
குங்ஃபூ பாண்டியா அதைச் செய்ய முயற்சி பண்ணி எல்லா பாலுக்கும் பேட்ட சுத்துனதாலதான் ஸ்லோ பால் அவரைக் காவு வாங்குச்சு. ஆனா மிஸ்டர் 360° நேரெதிரா “கேப்டன் நீதான் உனக்குத்தான் பிரச்சனை, எனக்கு என்ன வந்துச்சு?!”ன்னு வேட்டைக்காரன் மோட்ல பேட்டை சுத்தாம சர்வைவர் மோடுக்குள்ல சுருண்டதுதான் சோதனை. கடைசில ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாலயே திருட்டுத்தனமா வெளியான திரைப்படம் மாதிரி ரூதர்ஃபோர்டோட போராட்டம் வீணானதுதான் வேதனை. இறுதி ஓவர்ல அவர் ஆடுனதுலாம் ருத்ர தாண்டவம். கடைசில அவர் காட்டுன இண்டென்ட கொஞ்சமாவது சூர்யக்குமார் சீனியர் பிளேயரா முன்னாடி காட்டியிருக்கலாம்.
80 + 80 + 80னு மூன்று பகுதியா அடிக்க வேண்டிய ரன்களப் பிரிச்சு பவர்பிளே, இறுதி ஆறு ஓவர்கள்ல தலா 80 ரன்களைக் கடந்திருந்தா மத்திய ஓவர்கள்ல ரன்கள்வரத்து குறைஞ்சிருந்தாலும் சமாளிச்சிருக்கலாம், கோலிக்கு டெடிகேட் பண்ற மாதிரி வெறும் `18′ ரன்கள வித்தியாசத்திலான தோல்வியும் அதைத்தான் உறுதிப்படுத்தியது. பவர்பிளேல ஏற்பட்ட அந்த பற்றாக்குறைதான் அடுத்தடுத்த ஓவர்கள்ல அழுத்தத்த ஏத்தி தோல்விக்குக் காரணமானது.
மொத்தத்தில் Red Soil இருந்ததோ இல்லையோ இருபக்க பௌலர்களை ரத்தம் சிந்த வச்சதா வான்கடே மாற, மும்பைக்கு ஹாட்ரிக் தோல்வியைக் கொடுத்து ரசிகர்களுக்கு ஹார்ட் பிரேக் கொடுத்ததா இந்தப் போட்டி மாறியிருக்கு.!