Modi: “அந்த அடிமைத்தனத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்தது பாஜகதான்" – பிரதமர் மோடி

Spread the love

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தீன் தயாள் உபாத்யாய் மற்றும் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரின் வாழ்க்கை மற்றும் லட்சியங்களைப் போற்றும் வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ‘ராஷ்டிர பிரேர்ணா ஸ்தல்’ என்ற அருங்காட்சியகம் ரூ.232 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டிருக்கிறது.

சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ‘ராஷ்டிர பிரேர்ணா ஸ்தல்’ அருங்காட்சியகம், பா.ஜ.க-வின் தேர்தல் சின்னமான தாமரை வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவிடத்தில், மூன்று தலைவர்களின் பிரம்மாண்ட வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத் திறப்புவிழாவில் கலந்துகொண்டு, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

ராஷ்டிர பிரேர்ணா ஸ்தல்
ராஷ்டிர பிரேர்ணா ஸ்தல்

அப்போது, “ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இது. லக்னோ ஒரு புதிய உத்வேகத்தைக் கண்டு வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் செய்யப்பட்ட ஒவ்வொரு நல்ல காரியத்திற்கும், ஒரே ஒரு குடும்பத்திற்கு மட்டுமே பெருமை சேர்க்கும் போக்கு நிலவியது.

எழுத்தாளர்கள், அரசுத் திட்டங்கள், அரசு நிறுவனங்கள் என எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் ஒரே ஒரு குடும்பத்தை மட்டுமே போற்றி வந்தன.

அந்தக் குடும்பத்தின் பெயர்களும், அவர்களின் சிலைகளும் மட்டுமே இருந்தன. இந்த அடிமைத்தனத்திலிருந்து பா.ஜ.க நாட்டை மீட்டெடுத்துள்ளது. எனது அரசு ஒவ்வொரு தலைவரும் ஆற்றிய பங்களிப்பை மதிக்கிறது.

அம்பேத்கரின் பாரம்பர்யத்தை அழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதை யாராலும் மறக்க முடியாது. டெல்லியில் உள்ள காங்கிரஸின் அரச குடும்பம் இந்தப் பாவத்தைச் செய்தது.

சமாஜ்வாடி கட்சியும் உத்தரப்பிரதேசத்தில் அதே தவறான முயற்சியை மேற்கொண்டது. ஆனால், பாபாசாகேப்பின் பாரம்பர்யத்தை அழித்துவிட பா.ஜ.க அனுமதிக்கவில்லை. தலித் மக்களின் விடுதலைக்காகப் பாடுபட்டவருடன் தொடர்புடைய அனைத்தையும் எனது அரசு பாதுகாத்துள்ளது.

ராஷ்டிர பிரேர்ணா ஸ்தல்: மோடி
ராஷ்டிர பிரேர்ணா ஸ்தல்: மோடி

குடும்ப அரசியல் ஒரு தனித்துவமான குணாதிசயத்தைக் கொண்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பின்மை என்ற மனநிலையில் இருப்பார்கள். எனவே, மற்றவர்களை இழிவுபடுத்துவது அவர்களுக்குக் கட்டாயமாகிவிடும். அதன் மூலம் தங்கள் பெருமையைப் பெரியதாகக் கருதுவார்கள். அதன் மூலம் தங்கள் அரசியல் செல்வாக்கு தொடரும் என்றும் நினைக்கிறார்கள். இந்த நம்பிக்கை இந்தியாவில் அரசியல் தீண்டாமையை அறிமுகப்படுத்தியது.

இந்தியாவுக்குப் பல நேரு-காந்தி குடும்பத்தைச் சாராத பிரதமர்கள் இருந்தனர். ஆனால் டெல்லியில் உள்ள அருங்காட்சியகம் அவர்களைப் புறக்கணித்தது. பா.ஜ.க மற்றும் என்.டி.ஏ இந்த நிலையை மாற்றின. காங்கிரஸும் அதன் கூட்டாளிகளும் பா.ஜ.க-வைத் தீண்டத்தகாதவர்களாக நடத்தினார்கள்.

ஆனால் அனைவரையும் மதிப்பதுதான் பா.ஜ.க-வின் கலாச்சாரம். 2014-ல் நான் பிரதமராவதற்கு முன்பு 25 கோடி இந்தியர்களுக்கு மட்டுமே சமூகப் பாதுகாப்பு இருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை 95 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *