Mohan lal:“எங்கள் அன்பான லாலுவுக்கு" – வாழ்த்து தெரிவித்த மம்மூட்டி | வைரலாகும் வீடியோ

Spread the love

71-வது தேசிய விருது வழங்கும் விழாவில், நடிகர் மோகன்லாலுக்கு, இந்திய சினிமாவில் அவரது பங்களிப்பைப் பாராட்டி, மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே விருது கடந்த செப்டம்பர் மாத இறுதியில் வழங்கப்பட்டது. இந்த விருது அறிவிக்கப்பட்டபோதே திரைப்பிரபலங்கள் பலரும் நடிகர் மோகன் லாலுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

இதற்கிடையில், சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் மம்முட்டியும், நடிகர் மோகன்லாலும் படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் ஃபகத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா, ரேவதி, தர்ஷனா ராஜேந்திரன், செரீன் ஷிஹாப், ஜினு ஜோசப், ராஜீவ் மேனன், டேனிஷ் ஹுசைன், ஷாஹீன் சித்திக், உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. கதை மற்றும் திரைக்கதையை மகேஷ் நாராயணன் எழுதியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இலங்கை, அஜர்பைஜான், டெல்லி, ஷார்ஜா, கொச்சி, லடாக் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நிறைவடைந்துள்ளது. தற்போது கொச்சியில் உள்ள மகேஷ் நாராயணனின் ‘PATRIOT’ திரைப்படத்தின் செட்டில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மம்மூட்டி – மோகன்லால் கூட்டணி இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் படப்பிடிப்பு செட்டில் நடிகர் மோகன்லால் தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டுவிழா நடத்தியிருக்கின்றனர். இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த நடிகர் மம்மூட்டி, “பால்கே விருதை வென்ற எங்கள் அன்பான லாலுவுக்கு.. அன்புடன்…” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இயக்குநர் மகேஷ் நாராயணன் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆண்டனி பெரும்பாவூர், சி.ஆர்.சலீம், ஆண்டோ ஜோசப், குஞ்சாக்கோ போபன், ரமேஷ் பிஷாரடி, எஸ்.என். சுவாமி, கன்னட நடிகர் பிரகாஷ் பெலவாடி மற்றும் ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மோகன்லாலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *