Motor Vikatan – 01 January 2026 – Editor Page|புதிய அத்தியாயம் தொடங்கும் மஹிந்திரா!

Spread the love

புத்தாண்டு நம்மை பூரிப்போடு வரவேற்கிறது. கார் மற்றும் பைக் கனவுகளோடு இருக்கும் நடுத்தரக் குடும்பத்தினர் பலரையும், கார்/பைக் விற்பனை மையங்கள் நோக்கி நகர்த்தியிருக்கிறது குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி. இந்த வரிக் குறைப்பு என்பது கார் பைக்குகளுக்கான உதிரிபாகங்களுக்கும் சேர்ந்தே நடந்திருக்கிறது என்பதால், எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே கூட கார்/பைக் விலைகள் நடுத்தர குடும்பத்தை நோக்கி இறங்கி வந்திருக்கின்றன.

இன்னொரு பக்கம், மின்சாரக் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் பங்களிப்பு ஆட்டோமொபைல் துறையில் அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில்தான் 2025-ம் ஆண்டு வெளியான சிறந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான மோட்டார் விருதுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தருணம் வந்தது.

இந்தப் பணியில் வழக்கம்போல வாசகர்களாகிய நீங்கள், ஆன்லைனிலும் தபால் மூலமும் உங்களின் தேர்வுகளை எங்களுக்குத் தெரியப்படுத்தி, மோட்டார் விகடன் நடுவர் குழுவின் வேலையை எளிதாக்கியிருக்கிறீர்கள்.

அதிகப் போட்டிகள் நிறைந்த மிட்சைஸ் எஸ்யூவி செக்மென்ட்டில் களமிறங்கியிருக்கும் மாருதி சுஸூகி விக்டோரிஸ், இதே செக்மென்ட்டில் புதிய ப்ளாட்ஃபார்ம், புதிய இன்ஜின், புதிய தொழில்நுட்ப வசதிகள் ஆகியவற்றோடு அறிமுகமாகி பலரையும் கிளர்ந்தெழச் செய்த டாடா சியரா ஆகிய கடுமையான போட்டியாளர்களைத் தாண்டி இந்த ஆண்டின் சிறந்த காராக மஹிந்திரா XEV 9e வெற்றி பெற்றிருக்கிறது. சியராவும் ஒரு விருதைத் தட்டிச் செல்கிறது. படியுங்கள்; உங்களுக்கே தெரியும்!

அற்புதமான ரைடு மற்றும் ஹேண்ட்லிங்கிற்கும், உற்சாகம் தரும் ஓட்டுதல் அனுபவத்துக்கும் உத்திரவாதம் கொடுக்கும் INGLO இயங்குதளம் ஒருபுறம். இன்னொருபுறம் இந்தக் காரை சாஃப்ட்வேர் டிரைவன் காராக மாற்றியதுடன் இதன் மூளையாக இருந்து செயல்படும் MAIA (Mahindra”s Artificial Intelligence Architecture) – இந்த இரண்டும் சேர்ந்து இந்தியக் கார் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தையே துவங்கி வைத்திருக்கின்றன.

அதேபோல இந்த ஆண்டின் சிறந்த பைக், சிறந்த ஸ்கூட்டர் ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பதிலும் பலத்த போட்டி நிலவியது. என்றாலும், இந்தப் போட்டியில் பைக் ஆஃப் தி இயர் 2026 விருதினை டிவிஎஸ் அப்பாச்சி RTX 300 வென்றிருக்கிறது. ஹீரோ ஸூம் 125 ஸ்கூட்டர் ஆஃப் தி இயர் 2026 விருதைத் தட்டிச் செல்கிறது. சிறந்த கம்யூட்டர் பைக் 2026 விருதினை ஹோண்டா CB125 ஹார்னெட்டும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆஃப் தி இயர் 2026 விருதினை ஹீரோ விடா VX2 Go-வும் கைப்பற்றி இருக்கின்றன.

வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள். வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க உதவிய வாசகப் பெருமக்களாகிய உங்களுக்கு எங்கள் நன்றி.

புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

– ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *