Motor Vikatan – 01 March 2026 – Editor Page|ஆசிரியர் பக்கம்

Spread the love

உங்களின் மோட்டார் விகடன், கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் வாகனப்பிரியர்களுக்கு நல்வழிகாட்டியாகவும் தொழில்நுட்ப ஆலோசகராகவும் வந்துகொண்டிருக்கிறது. வாகனங்களின் பலம் மற்றும் பலவீனங்கள், தொழில்நுட்ப அம்சங்கள், பராமரிப்பு உத்திகள் என்று தமிழ் மக்களின் தினசரி வாழ்வில் மோட்டார் விகடன் இணைந்திருந்தது. ஒவ்வோர் ஆண்டும் மோட்டார் விகடன் அளிக்கும் விருதுகளைப் பல நிறுவனங்களும் பெருமிதத்துடன் ஏற்றதும் வாசகர்கள் தந்த அங்கீகாரத்தின் விளைவுதான்.

வாகனங்களில் பல மாற்றங்கள் நிகழ்வதுபோலவே, ஊடகத்துறையிலும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. அச்சு வடிவம் மட்டுமே ஊடகம் என்றிருந்தது மாறி சமூக ஊடகம், காட்சி ஊடகம் என்று பல்வேறு வாசல்களும் திறக்கப்பட்டுவிட்டன. இதழ் வாயிலாக மட்டுமே என்றிருந்த நம்முடைய பிணைப்பு, இந்த டிஜிட்டல் யுகத்தில் இன்னும் பல தளங்களுக்கும் விரிவாகியிருக்கிறது.

இத்தகைய சூழலில், மாத இதழாக வெளியாகிவந்த ‘மோட்டார் விகடன்”, இந்த இதழோடு அச்சு வடிவில் இருந்து விடைபெறுகிறது. ஆனால், காட்சி ஊடகமான யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் பக்கம் ஆகியவற்றில் முன்னை விடவும் சுறுசுறுப்பாக உங்களோடு உறவாடும். அதேபோல, விகடன் குழுமத்தின் பிற இதழ்கள், விகடனின் இணையதளம், சமூக வலைதளங்கள் மற்றும் விகடன் சார்பில் நடத்தப்படும் பயிற்சிகள்/நிகழ்ச்சிகள் என்று பலவற்றின் வாயிலாகவும் உங்களுடன் தொடர்பில் எப்போதும் இருப்போம்.

விகடனின் அக்கறைக்கு மதிப்புக் கொடுத்து ஆதரவளித்துவரும் வாசகர்கள், முகவர்கள், விளம்பரதாரர்கள், ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி! இந்த அன்பும் ஆதரவும் எங்கள் டிஜிட்டல் மற்றும் சோஷியல் மீடியா தளங்களிலும் எப்போதும் தொடர வேண்டுகிறோம். என்றென்றும் இணைந்திருப்போம்!

– ஆசிரியர்

மோட்டார் விகடன் அச்சுப்பிரதிக்கு (Print Copy) சந்தா செலுத்தியிருக்கும் வாசகர்கள் விரும்பினால், விகடன் குழுமத்திலிருந்து வெளியாகும் பிற இதழ்களுக்கோ, விகடன் இணையதளத்துக்கோ தங்களின் சந்தாவை மாற்றிக்கொள்ளலாம். பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால், மீதித் தொகை விரைவில் அனுப்பி வைக்கப்படும். இது தொடர்பாக சந்தாதாரர்களுக்குத் தனியாகக் கடிதம் அனுப்பி வைக்கப்படும்.

தொடர்புக்கு: 044-66802980, 044-66802907

இமெயில்: subscribe@vikatan.com

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *