அண்ணாவின் மறைவுக்குப் பின் 1971 தேர்தலில் அமோக வெற்றி பெற்று கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைக்கிறது திமுக. அந்த தேர்தலின் போது தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் தேர்தல் பணிகளுக்குத் தாராளமாகச் செலவு செய்பவருமாகத் திகழ்ந்த எம்ஜிஆருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை !
அங்குத் தொடங்கி, எம்ஜிஆரின் கலகக்குரல் “கணக்கு கேட்பதில்” முடிகிறது !
1972ல் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர், ஒரே வாரத்தில் அதிமுகவைத் தொடங்கி “புரட்சித்தலைவர்” ஆகிறார் !

எம்ஜிஆர் அதிமுக எனும் தனிக்கட்சியை தொடங்கியதற்கு,
“அவர் என்ன விரும்பினாரோ, எதற்காகத் திட்டமிட்டாரோ அது நடந்திருக்கிறது” என்கிறார் கருணாநிதி !
கண்ணதாசன், “நான் பார்த்த அரசியல்” நூலில் குறிப்பிட்டதை மீண்டும் இங்கு நினைவு கூற வேண்டும்…
“அரசியலில் ஒரு கட்சி தொடங்க வேண்டும், அதற்குத் தான் தலைவராக வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் எம்ஜிஆருக்கு இருந்ததில்லை. திரைத்துறையில் தன் ஆதிக்கம் போய்விடக் கூடாது, அரசியலில் தன் பிடி நழுவிவிடக் கூடாது என்றுதான் அவர் நினைத்தாரே தவிர, முழு நேர அரசியல்வாதியாகச் செயல்பட அவர் விரும்பவில்லை. ஆனால் அவரை வலுக்கட்டாயமாக ஒரு தலைவராக்கியது கருணாநிதிதான்.”
தீர்மானிக்கும் இடத்திலிருந்தால் மட்டுமே அரசியலில் பிடி நழுவாமல் நிலைக்க முடியும். தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவருக்குத்தான் தலைவர் என்ற பெயர் பொருந்தும் !
தொடரும்…
காரை அக்பர்