Nanayam Vikatan – 05 April 2026 – ‘கார்ப்பரேட் மோசடிகளில் ஆடிட்டர்களுக்கும் பொறுப்பு உண்டு!’ -என்.சி.எல்.டி-யின் வரவேற்கத்தக்க உத்தரவு | corporate fraud to responsibility in auditing institutions

Spread the love

இந்திய கார்ப்பரேட் உலகில் ஆடிட்டர்களுக்கு எப்போதுமே பெரும் மரியாதை உண்டு. அவர்கள்தான் முதலீட்டாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் நிதிரீதியான பாதுகாப்பை உறுதி செய்யும் காவலாளிகள். ஆனால், சில மோசடி வழக்குகளின் விசாரணைகளில், ‘நிறுவன மோசடிகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை’ என்று ஆடிட்டிங் நிறுவனங்கள் பொறுப்புத் துறப்பதும் நடக்கிறது. அதுபோன்றவர்களுக்கு, இப்போது தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயம் (NCLT – National Company Law Tribunal).

நாட்டின் நிதித் துறையையே உலுக்கிய ஐ.எல் அண்ட் எஃப்.எஸ் முறைகேடு வழக்கில், இந்நிறுவன மோசடி விவகாரத்தில் டிலாய்ட், பி.எஸ்.ஆர் அசோசியேட்ஸ் மற்றும் எஸ்.ஆர்.பி.சி ஆகிய மூன்று பெரிய ஆடிட் நிறுவனங்கள் மீது விசாரணை நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று என்.சி.எல்.டி வழங்கியுள்ள உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த ஆடிட்டிங் நிறுவனங்கள், தங்களை ‘வெளிப்புற ஆடிட்டர்கள்’ என்று சொல்லி, ‘நிறுவனத்தின் உள்ளக நிர்வாகத்தில் ஈடுபடவில்லை. எனவே வழக்கி லிருந்து விலக்குங்கள்’ என்று வாதிட்டன. ஆனால், என்.சி.எல்.டி அந்த வாதத்தை நிராகரித்துவிட்டது. ‘நிறுவனங்களில் மோசடி நடந்தால் அதைக் கண்டறிய வேண்டியது ஆடிட்டிங் நிறுவனங்களின் பொறுப்பு. அதைத் தட்டிக்கழிக்க முடியாது’ என்று தெளிவாகக் கூறியுள்ளது.

இந்த உத்தரவு, நிறுவனங்கள் சட்டம் பிரிவு 339-ல் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘‘இச்சட்டப் பிரிவில் உள்ள ‘Any person’ என்ற வரையறையை வெறும் உள்ளக நபர்களுடன் மட்டும் நிறுத்த முடியாது, தேவைப்பட்டால் ஆடிட்டிங் நிறுவனங்கள் போன்ற மூன்றாம் தரப்பினரையும் (Third parties) உள்ளடக்கலாம்’’ என்று என்.சி.எல்.டி விளக்கியுள்ளது.

‘வழக்கு விசாரணைகளில் இனி ஆடிட்டர்கள், ஆடிட்டிங் நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை, அறிக்கைகளை, கவனக்குறைவுகளை நீதிமன்றத்தில் விளக்க வேண்டும். நடந்த மோசடிக்கு அவர்களும் உடந்தையா, அலட்சியத்தால் தவறு நடந்ததா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு அவர்கள் அளிக்கும் விளக்கத்தின்படியே வழக்கின் தீர்ப்பு அமையும். ஆடிட்டர்கள் வெறும் கையெழுத்துப் போடுபவர்கள் அல்லர், பொறுப்பு வகிப்பவர்கள். அவர்களது அலட்சியம்/தவறு பொதுமக்களின் பணத்தையும், நம்பிக்கையையும் பாதிப்பதாக இருந்தால் அதற்கான விலையை அவர்களும் கொடுக்க வேண்டும்’ என்பதாகவே இந்த உத்தரவைப் புரிந்துகொள்ள முடிகிறது.

என்.சி.எல்.டி-யின் இந்த உத்தரவு, முதலீட்டாளர்களுக்கு ஒரு நற்செய்தி. இனி, கார்ப்பரேட்களின் கணக்குகள் சரியாக இருக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரிக்கும். ஆடிட் அறிக்கைகள் மீதான நம்பிக்கை வலுப்பெறும். தவறு நடந்தால், அதற்கான விசாரணை நிறுவன நிர்வாகத்தோடு மட்டும் நின்றுவிடாது; தொடர்புடைய மூன்றாம் தரப்புக்கும் நீண்டு செல்லும். ஆடிட்டர்களும், ஆடிட்டிங் நிறுவனங்களும் இனி தங்கள் பொறுப்பை உணர்ந்து நேர்மையுடன் செயல்படுவார்கள் என்றும் மோசடிகள் குறையும் என்றும் எதிர்பார்ப்போம்.

– ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *