இன்று உலகின் ஏதோ ஓர் இடத்தில் ஏற்படும் அரசியல் பதற்றம், அதோடு தொடர்பில்லாத நாடுகளின் பொருளாதார நிலையையும் தலைகீழாக மாற்றி விடுகிறது. இது உலகமயமாக்கலின் தவிர்க்க முடியாத விளைவு. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.
இந்தியா பல்வேறு விஷயங்களுக்குப் பிற நாடுகளைத்தான் சார்ந்திருக்கிறது. குறிப்பாக, கச்சா எண்ணெயை அதிகமாக இறக்குமதி செய்யும் இரண்டாவது நாடாக இருக்கிறது. நம் 85% தேவையை இறக்குமதியே பூர்த்திசெய்கிறது. இயற்கை எரிவாயு தேவைக்கும் 45% இறக்குமதியையே நம்பியுள்ளோம். உரங்கள், ரசாயனங்கள் போன்றவற்றிலும் இதுவே நிலைமை. இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 2% வளர்ச்சி அடைந்தால், இறக்குமதி 8% அதிகரிக்கிறது.
சீனா, ரஷ்யா, அரபு நாடுகள், அமெரிக்கா, சவுதி அரேபியா… இவையெல்லாம் இந்தியா அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகள். இவை எந்த நெருக்கடியைச் சந்தித்தாலும், இந்த நாடுகளில் அரசியல் ரீதியான சிக்கல் உருவானாலும் அது இந்தியாவை பாதிக்கிறது.
2008-ல் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் இந்திய ஜிடிபி வளர்ச்சி 9%-லிருந்து 6.7%-ஆக சரிந்தது; ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் 50% வரை குறைந்தது; வேலையிழப்பு அதிகரித்தது; பங்குச் சந்தைகள் இழப்பைச் சந்தித்தன. 1991 வளைகுடா போரின்போது கச்சா எண்ணெய் விலை ரூ.18-லிருந்து ரூ.41-ஆக உயர்ந்தது. அதனால் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்தது.
கொரோனா தொற்றுக்காலத்தில் ஜி.டி.பி 6.6% ஆகச் சுருங்கியது. வேலையின்மை உச்சம் தொட்டது. ரஷ்யா-உக்ரைன் போரினால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து இந்திய இறக்குமதி செலவை 10% உயர்த்தியது. அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் போரில் இந்தியா உட்பட வளரும் நாடுகளின் ஏற்றுமதி 30% வரை பாதிக்கப்பட்டது. இப்போது அமெரிக்கா-ஈரான் போர் தொடர்பான செய்திகள் இந்தியாவுக்கு நெருக்கடிகளை உண்டாக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதுபோன்ற பாதிப்புகளைத் தவிர்க்க, ஒரு நாட்டின் பொருளாதாரம் வலுவான அடித்தளத்துடனும் தற்சார்புடனும் இருக்க வேண்டும். சீனா இதற்குச் சிறந்த உதாரணம். ஆனால், மனிதவளம், இயற்கை வளம் என சீனாவுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத நாம், இன்னமும் தற்சார்பு பற்றிப் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். மேக் இன் இந்தியா போன்ற பல திட்டங்கள் இருந்தாலும் உற்பத்தி வளர்ச்சி அடையவில்லை.
தற்போது, தற்சார்பு பொருளாதார நடவடிக்கைகளில் வேகம் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்தியா. அதற்கேற்ப கொள்கைகளை வகுத்து, உள்கட்டமைப்பில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும். வங்கி மற்றும் நிதித் துறைகளை வலுப்படுத்த வேண்டும். விவசாயம், சிறு தொழில்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இவையெல்லாம்தான் நம் நாட்டை உலக நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வகையில் வலிமையாக உருவாக்கும். தவறினால், ‘அமெரிக்கா தும்மினால் இந்தியாவுக்குச் சளி பிடிக்கும்’ என்ற நிலைதான் தொடர்ந்து நீடிக்கும்.
– ஆசிரியர்