Nanayam Vikatan – 21 December 2025 – கேட்பாரற்றுக் கிடக்கும் ஒரு லட்சம் கோடி ரூபாய்… உரியவர்களிடம் சேர்க்க இதுதான் ஒரே வழி! | unclaimed money distribution scheme in central government

Spread the love

வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் போன்றவற்றில், சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணம் கோரப் படாமலேயே கிடப்பது, மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது. காரணம், அந்தப் பணத்தை உரியவர்களிடம் கொண்டு சேர்க்க, தீவிர பிரசாரத்தை மத்திய அரசு கையில் எடுத்திருப்பதுதான்.

டெபாசிட்டுகளாக, ஓய்வூதியமாக, முதலீட்டு வருமானமாக, பங்குப் பத்திரங்களாக மற்றும் ஈவுத்தொகைகளாக எனக் கோரப்படாமல் கிடக்கும் பல்லாயிரம் கோடி ரூபாய்களை உரியவர்களிடம் சேர்க்கும் நோக்கத்தில், ‘உங்கள் பணம் உங்கள் உரிமை’ என்ற இயக்கத்தை கடந்த அக்டோபரில் மத்திய அரசு தொடங்கியது. ‘‘இதன் மூலம் கடந்த இரண்டு மாத காலத்தில் ரூ.2,000 கோடி ரூபாயை உரியவர்களிடம் சேர்த்துள்ளோம்’’ என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார், பிரதமர் மோடி.

மேலும், “இந்திய வங்கிகளில் ரூ.78,000 கோடி, காப்பீட்டு நிறுவனங்களில் ரூ.14,000 கோடி, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் சுமார் ரூ.3,000 கோடி மற்றும் ஈவுத்தொகைகளாக ரூ.9,000 கோடி என சுமார் ரூ.1 லட்சம் கோடிக்கும் மேலான மக்கள் பணம் கோரப்படாமல் உள்ளன.

இந்தப் பணம், தங்கள் கடின உழைப்பால் மக்கள் சேர்த்தது. உரியவர்கள் இத்தொகையைப் பெறுவதற்கான முழு உரிமையும் உள்ளது. எனவே, ‘உங்கள் பணம் உங்கள் உரிமை’ இயக்கம் சார்பாக, நாடு முழுவதிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, 477 மாவட்டங்களில் உள்ள முகாம்களைப் பயன்படுத்தி, உரியவர்கள் அவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

‘‘ரிசர்வ் வங்கியின் UDGAM, காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) Bima Bharosa, செபியின் MITRA, மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான mf central, கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் IEPFA ஆகிய இணையதள போர்ட்டல்களைப் பயன்படுத்தி, கோரப்படாத பணத்தின் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்’’ என்றும் பிரதமர் அறிவுறுத்தி உள்ளார்.

பிரதமர் குறிப்பிட்டுள்ள அத்தனை போர்ட்டல்களும், ஏற்கெனவே நடைமுறையில் இருக்கின்றன. ஆனால், அவற்றில் சில நடைமுறைச் சிக்கல்கள், பிரச்னைகள் இருக்கின்றன என்பதே உண்மை.

‘உங்கள் பணம் உங்கள் உரிமை’ இயக்க முகாம்கள், இந்த நடைமுறைச் சிக்கல்களுக்கும் தீர்வு அளிக்க வேண்டும். அதற்கேற்ப விதிமுறைகளை வகுத்து, மக்களுக்குச் சரியான வழிகாட்டுதல்களை வழங்கினால், ‘எங்கள் பணம் எங்களுக்குக் கிடைத்துவிட்டது’ என்கிற சந்தோஷ கோஷம் நாடு முழுக்க நூறு சதவிகிதம் ஒலிக்கும்!

– ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *