Nanayam Vikatan – 22 March 2026 – எங்கோ நடக்கும் போர் நம் சமையலறையை பாதிக்கிறது, அவ்வளவு பலவீனமாகவா இருக்கிறது இந்தியா? | gas and petrol shortage in india

Spread the love

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தொடங்கிய போர் இரண்டு வாரங் களைக் கடந்துள்ளது. பெரும் உயிரிழப்புகள், பொருள் சேதம் என மேற்காசிய மக்கள் நிம்மதியிழந்துள்ளனர். கூடவே இப்போர், எண்ணெய், எரிவாயு வர்த்தகத்தில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி, கச்சா எண்ணெய் விலையை ஏற்றி, இறக்கி சர்வதேச சந்தைகளையும், மக்களையும் கலங்கடித்து வருகிறது.

குண்டுவெடிப்பின் சத்தம்கூட கேட்காத இந்தியாவிலும், தடைபடும் எரிபொருள் விநியோகத்தின் தாக்கம் பரவியிருக்கிறது. பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன. வணிக சிலிண்டர்கள் நிறுத்தப்பட்டதால் பல இடங்களில் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. அச்சத்தால் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு காஸ் சிலிண்டர் புக் செய்கின்றனர்; மின்சார அடுப்பு, விறகு அடுப்புகளை வாங்கக் குவிகின்றனர்.

மக்களைச் சூழ்ந்துள்ள இந்தப் பதற்றத்துக்குக் காரணம் போர் அல்ல, மத்திய, மாநில அரசுகளே. போரினால் வரும் எண்ணெய், எரிவாயு தட்டுப்பாட்டை அரசுகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன என்பது இரண்டாவது கேள்வி. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை என்பதுதான் முதல் கேள்வி.

‘இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88%, எரிவாயு தேவையில் 60% என இறக்குமதியைச் சார்ந்திருக்கிறது’ என்கிறார்கள். ஆனால், சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளும்கூட இறக்குமதியைச் சார்ந்துதான் உள்ளன. அவை இதுபோன்ற சமயங்களில் நெருக்கடிக்குள்ளாகாத வகையில் முன்னேற் பாடாகச் செயல்படுகின்றன.

உதாரணத்துக்கு, சீனா தனது எண்ணெய் கையிருப்பை தீவிரமாகக் கட்டமைத்து, தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது. இப்போதைய நிலவரப்படி அதன் கையிருப்பு மூன்று மாதங்கள் வரை வரும் எனச் சொல்லப்படுகிறது. அதேநேரம் பல்வேறு நாடுகளிலிருந்து (ரஷ்யா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா) எண்ணெய் வாங்கி, பற்றாக்குறை ஆபத்துகளையும் குறைத்துக்கொள்கிறது. அதுமட்டுமல்லாமல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சார வாகனங்களில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்து, எண்ணெய் சார்பைக் குறைத்துள்ளது.ஆனால், இந்தியாவின் எண்ணெய்க் கையிருப்பு 20 நாள்களுக்கு மட்டுமே உள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்சார வாகனம் போன்றவற்றிலும்கூட நாம் பெரிதாக முன்னேறவில்லை. அதுமட்டுமா? நாம் யாரிடம் எண்ணெய் வாங்க வேண்டும், வாங்கக் கூடாது என்று அமெரிக்காதான் தீர்மானிக்கிறது. இது யாருடைய தோல்வி?

போரை நம்மால் தடுக்க முடியாது. ஆனால், எங்கோ நடக்கும் போர் நெருக்கடிகள் நம் சமையலறையில் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்குப் பலவீனமாக இருக்கக் கூடாது. பொருளாதாரத்தை இயக்குவதே எரிசக்திதான் எனும்போது, அதில் தற்சார்பு அடையாமல், வளர்ச்சி சாத்தியமாகாது.

இந்தியா இனியாவது விழித்து, எரிசக்திக் கொள்கையை வகுத்து, உண்மையான தற்சார்பை நோக்கி முன்னேற வேண்டும். இல்லையெனில், அடுத்த போர், அடுத்த நெருக்கடி என இந்தியா பாதிப்புக்குள்ளாவது தொடரவே செய்யும்!

– ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *