Nanayam Vikatan – 29 March 2026 – ரூ.9.75 லட்சம் கோடி கடன் தள்ளுபடி… பொதுமக்களுக்குச் சுமையாகுமா? | bank loan discount in reflect to people

Spread the love

இந்திய வங்கிகள் கடந்த 11 ஆண்டுகளில் 9.75 லட்சம் கோடி ரூபாய் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளன என்ற அதிர்ச்சித் தகவலால், வங்கித் துறை மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள் பலரும்.

ஆனால், அரசுத் தரப்பிலும் வங்கிகள் தரப்பிலும், ‘இது கடன் தள்ளுபடி அல்ல. வங்கிகள் புரொவிஷனிங் செய்வதன் மூலம் பேலன்ஸ் ஷீட்டிலிருந்து வாராக்கடன்களை நீக்கும் நடவடிக்கை மட்டுமே. கடன் பெற்றவர் கடனை அடைக்கும் பொறுப்பும், கடனை மீட்கும் நடவடிக்கைகளும் தொடரும். இதற்காகவே சர்ஃபாசி (SARFAESI), திவால் சட்டம் (IBC) மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் உள்ளன. அதுமட்டுமல்லாமல், 2020-ல் அதிகபட்சமாக ரூ.1.59 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 2024-25 நிதி ஆண்டில் அது ரூ.47,568 கோடியாகக் குறைந்துள்ளது. மேலும், வாராக்கடன் மீட்பு விகிதம் 19%-லிருந்து 35%-க்கு உயர்ந்துள்ளது’ என்று விளக்கப்பட்டுள்ளது.

உண்மைதான், வாராக்கடன்களால் திவால் ஆகும் நிலையிலிருந்து வங்கிகளைக் காப்பாற்றியது இந்த நடவடிக்கைகள்தான். வாராக்கடன் தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்படுவதற்கு முன் வங்கிகளின் வாராக்கடன் அளவு 11% -12% ஆக இருந்தது, தற்போது 2.3%-5% அளவுக்குக் குறைந்துள்ளது. இதனால், வங்கிகள் வலுவான பேலன்ஸ் ஷீட், அதிக லாபம், வலுவான கடன் வழங்கல் என மேம்பட்டிருக்கின்றன. இதுவே நாட்டின் 6%-7% ஜிடிபி வளர்ச்சிக்கும் உயிர் கொடுக்கிறது.

இப்படி சில பாசிட்டிவ் விஷயங்கள் இதில் இருந்தாலும், தள்ளுபடி செய்யப் படும் கடன்கள் எல்லாமே மீட்கப்பட்டுவிடுவதில்லை. முக்கியமாக, பெரிய அளவில் கடன் வாங்கி வங்கிகளையும், அரசையும், நாட்டு மக்களையும் ஏமாற்றி ஏப்பம் விட்ட பெரும் கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்து இன்னமும் மீட்கப்படவில்லை. மேலும், கடன் மீட்பு விகிதம் 35% எனில், மீதமுள்ள 65% என்பது யாருடைய இழப்பு என்று பார்த்தால், அது கடைசியில் மக்கள் தலையில் தான் விழுகிறது. காரணம், வங்கிகளைக் காப்பாற்ற மக்களின் வரிப் பணத்தையே அரசு வழங்குகிறது.

இன்னொரு முக்கிய அபாயம், வாராக்கடன்களைப் பொறுத்தவரை சமீப காலங்களில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்கள் குறைந்து, தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் போன்ற ரீடெய்ல் கடன்கள் அதிகரித்து முன்னிலை வகிக்கின்றன. இது வங்கித் துறைக்கும், தனிநபர்களின் பொருளாதாரத்துக்கும், நாட்டுக்கும் புதிய ஆபத்து. கடன் அழுத்தம், வேலையிழப்பு, பணவீக்கம் எனப் பொதுமக்கள் தலையில் சுமை அதிகரிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

வங்கிகள், மக்களைக் கடன் வாங்கச் சொல்லித் திணிக்கக் கூடாது. வட்டி, கடன் வசூலிப்பு போன்றவற்றில் நேர்மையான விதிகள், அனைவருக்கும் பொதுவாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். வாராக்கடன்கள் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், ‘தள்ளுபடி’ என்ற பெயரில் மீண்டும் மீண்டும் மக்கள் பணம்தான் வீணாகும்.

– ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *