Naslen: தமிழ் அறிமுகம்; சூர்யா, மம்மூட்டி, ஃபகத் பாசிலுடன் கைகோக்கும் நஸ்லென் – அதிரடி லைன் அப்!

Spread the love

மலையாளத்தில் இப்போது இளம் பட்டாளங்கள் அதகளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நஸ்லென், மமிதா பைஜூ, அனஸ்வரா ராஜன், மேத்யூ தாமஸ், சந்தீப் எனப் பலரை இந்தப் பட்டியலில் குறிப்பிடலாம்.

நஸ்லென் கூடிய விரைவில் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகவிருக்கிறார். அப்படத்திற்கான வேலைகளில்தான் இப்போது அவர் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

Naslen - Lineup Movies
Naslen – Lineup Movies

‘ப்ரேமலு’ திரைப்படம் அவருக்கு நீண்ட பயணத்திற்கான கதவுகளையும் திறந்து வைத்தது. அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது மலையாள சினிமாவின் அத்தனை உச்ச நட்சத்திரங்களுடன் கைகோத்து நடித்துக் கொண்டிருக்கிறார் நஸ்லென். அவருடைய லைன் அப்பில் என்னென்ன படங்களை வைத்திருக்கிறார் எனப் பார்ப்போமா…

அவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘மாலிவுட் டைம்ஸ்’ திரைப்படம் வருகிற மே மாதம் திரைக்கு வருகிறது. இப்படத்தை இயக்குநர் அபிநவ் சுந்தர் நாயக் இயக்கியிருக்கிறார். ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இவர்.

மலையாள சினிமாவில் நடக்கும் நிகழ்வுகளைப் பிரதிபலிப்பதாக இத்திரைப்படம் இருக்கும் என்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து ஆசிஃப் அலி, வமிக்கா கேபி ஆகியோருடன் நஸ்லென் முக்கிய கேரக்டரில் நடிக்கும் ‘டிகி டக்’ திரைப்படமும் உருவாகி வருகிறது. இப்படத்தை மல்லுவுட் இயக்குநர் ரோஹித் வி.எஸ்.இயக்கி வருகிறார்.

‘சௌதி வெள்ளக்கா’, ‘துடரும்’ படங்களின் மூலம் பெரும் வெற்றியைப் பதித்தவர் இயக்குநர் தருண் மூர்த்தி. ‘துடரும்’ படத்தை முடித்தக் கையோடு அவருடைய அடுத்தத் திரைப்படத்திற்கான வேலைகளில் அவர் இறங்கிவிட்டார்.

Naslen
Naslen

தற்போது ஃபகத் பாசில், அர்ஜூன் தாஸ் ஆகியோர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். ‘டார்பிடோ (Torpedo)’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் நஸ்லெனும் முக்கியக் கேரக்டரில் நடித்து வருகிறார்.

மேலும், ‘ஆவேஷம்’ இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் ‘சூர்யா 47’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் நஸ்ரியா கதாநாயகியாக நடிக்க, நஸ்லென் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

இப்படம் தமிழ், மலையாளம் என பைலிங்குவல் படமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் பைலிங்குவல் திரைப்படம் என்பது உறுதியால், இப்படம்தான் நஸ்லென் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம்.

இவையனைத்தையும் தொடர்ந்து, ‘தள்ளுமாலா’, ‘ஆலப்புழா ஜிம்கானா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் படத்திலும் நஸ்லென் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *