மத்தியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (NCERT) வெளியிட்டுள்ள 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், “நீதித்துறை ஊழல்” குறித்த பாடம் இடம்பெற்றது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் “நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு” என்ற பாடம் இடம்பெற்றிருக்கிறது. அதில் நீதித்துறையின் அமைப்பு பற்றி மட்டும் பேசாமல், அதன் சவால்கள் மற்றும் ஊழல் குறித்தும் விவரிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் சுமார் 5.3 கோடி வழக்குகளின் (உச்ச நீதிமன்றத்தில் 81,000, உயர் நீதிமன்றங்களில் 62.4 லட்சம், மாவட்ட நீதிமன்றங்களில் 4.7 கோடி) புள்ளிவிவரங்கள் வழங்கப்பட்டிருந்தன.

நீதித்துறையில் ஊழல் மற்றும் முறைகேடுகள் பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதிக்கும் என முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பேசிய கருத்துகளும் அதில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தன.
இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, “இதில் ஆழமான விசாரணை தேவை. இதற்கு யார் பொறுப்பு என்பதைக் கண்டறிய வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்த வழக்கை இப்போதைக்கு முடிக்கப் போவதில்லை” என மிகக் கடுமையான கருத்துகளைப் பதிவு செய்தது.