NDA கூட்டணி: "நாம் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம்" – வாழ்த்திய இபிஎஸ்ஸுக்கு டிடிவி தினகரன் நன்றி

Spread the love

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் முடுக்கிவிட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்கு பா.ஜ.க. சார்பில் பொறுப்பு வழங்கப்பட்ட பியூஸ் கோயல் தமிழ்நாடு வந்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்புகள், பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அமமுக தலைவர் டிடிவி தினகரனை கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ள பா.ஜ.க கடுமையாகப் போராடியது.

ஒருகட்டத்தில் தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் அமமுக-வைப் போட்டியிட வைக்கத் தீர்மானித்தது. அதன் அடிப்படையில், பியூஸ் கோயல் தலைமையில், டிடிவி தினகரன் இன்று என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருக்கிறார்.

என்.டி.ஏ கூட்டணி
என்.டி.ஏ கூட்டணி

அதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், “தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு.டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, தி.மு.க குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக டிடிவி தினகரன் தன் எக்ஸ் பக்கத்தில், “மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம். கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் புதிய வெளிச்சத்தை பாய்ச்சிடும் சரித்திரமிக்க வெற்றியைப் படைத்திடுவோம்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *