நெல்லை மேயர் வேட்பாளர் ராமகிருஷ்ணன்

1290211.jpg
Spread the love

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் (எ) கிட்டு அறிவிக்கப்பட்டுள்ளார் நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் கடந்த ஜூலை 3 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நாளை (ஆக.5) மறைமுக மேயர் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு நெல்லை வந்துள்ள நிலையில் கவுன்சிலர்களுடனான ஆலோசனைக்குப் பின்னர் மேயர் வேட்பாளரை திமுக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மோதல், ராஜினாமா, மறுதேர்தல்.. திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் 51 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். திமுக கவுன்சிலர்கள் அனைவருமே முன்னாள் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்எல்ஏ மூலம் கவுன்சிலர் சீட் வாங்கியவர்கள். எனவே அவர்களில் பெரும்பாலானோர் தற்போது வரை அவருக்கு விசுவாசமாகவே இருந்து வருகின்றனர்.

மேயர் சரவணனும் அப்துல் வகாப் மூலமே கவுன்சிலராகவும் வாய்ப்பை பெற்றார். ஆனால், சரவணன் மேயரானதில் இருந்து அவருக்கும் அப்துல் வகாபுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இவர்களுடைய மோதல் போக்கால் திருநெல்வேலி மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள் முடங்கியிருப்பதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்தன.

அப்துல் வகாப் ஆதரவு கவுன்சிலர்கள் தொடர்ச்சியாக மாநகராட்சி கூட்டங்களில் மேயருக்கு எதிராக குடைச்சல் கொடுத்து வந்தனர். மேயருக்கு எதிராக கோஷம்போடுவது மேயர் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைப்பது, மன்ற அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது என்றெல்லாம் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. ஆனால் இதை பொருட்படுத்தாமல் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கானுடன் இணைந்து சரவணன், தனி வழியில் பயணித்து வந்தார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் நிலவிய பிரச்சினைக்கு முடிவுகட்ட மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு இரு தரப்பினரிடமும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்சினை தீரவில்லை. தொடர்ச்சியாக திருநெல்வேலி மாநகராட்சியில் மேயருக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே நிலவிய பனிப்போர் எதிரொலியாக மேயர் பதவியிலிருந்து சரவணன் கடந்த மாதம் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் (எ) கிட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை காலை 11 மணிக்கு மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *