நியூயார்க்:
இஸ்ரேலுக்கு ஈரானுக்கும் இடையேயான போர் பதட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பேஜர், வாக்கி டாக்கி வெடிப்பு தாக்குதல்கள் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து நடத்தப்பட்டது.
இதில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தொடர்ந்து இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெனானிலும் தாக்குதலை நடத்தி வருவதால் போர் பதட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஐ.நா.வில் நெதன்யாகு
இந்த நிலையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று (27ந்தேதி) ஐ.நா.சபை கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். லெபனான் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் கூச்சல்களுக்கு மத்தியில் நெதன்யாகு கூட்டத்தில் ஆவேசமாக பேசியதாவது:-
இஸ்ரேல் அமைதியை நாடுகிறது ஆனால் ‘போதும் போதும்..தெஹ்ரானின் கொடுங்கோலர்களுக்கு என்னிடம் ஒரு செய்தி உள்ளது. நீங்கள் எங்களைத் தாக்கினால், நாங்கள் உங்களைத் தாக்குவோம்.
ஈரானில் இஸ்ரேலால் அடைய முடியாத இடம் இல்லை. அதற்கான நீண்ட தூர ஆயுதங்கள் உள்ளது.முழு மத்திய கிழக்கு பகுதி முழுவதும் அடங்கும்.இந்த மேடையில் பேசுபவர்கள் பலர் என் நாட்டிற்கு எதிராக பொய்கள் மற்றும் அவதூறுகளை கூறினர். இதனை நான் கேட்ட பிறகு இங்கு வந்து அதனை சரிசெய்ய முடிவு செய்தேன்.
நடவடிக்கை தேவை
லெபனான் எல்லையில் இலக்குகளை அடையும் வரை ஹிஸ்புல்லா மீதான தாக்குதல்கள் தொடரும்.எங்களின் அனைத்து நோக்கங்களும் நிறைவேறும் வரை ஹிஸ்புல்லாவை ஒழிப்பதை தொடருவோம். ஈரான் மத்திய கிழக்கிற்கு அப்பால் அதன் தீவிரவாதத்தை திணிக்க முயல்கிறது, மேலும் முழு உலகையும் அச்சுறுத்துகிறது. இஸ்ரேலின் நடவடிக்கைகள் ஈரானின் அணுஆயுத திட்டத்தை தாமதப்படுத்தினாலும், அதை நிறுத்தப்படவில்லை. ஈரானுக்கு எதிராக உலகளாவிய நடவடிக்கை தேவை.
நெதன்யாகு பேசிக்கொண்டு இருந்த போது இரண்டு வரைபடங்களை காட்டினார். அதில் ஒன்று இந்தியாவிலிருந்து மத்திய கிழக்கு மற்றும் இஸ்ரேல் வழியாக ஒரு பாதையும், மற்றொன்று ஈரானின் பிற பகுதி முழுவதும் அதன் நட்பு நாடுகளை காட்டுகிறது.
ஈரான் மீதான நடவடிக்கை எடுக்காவிட்டால் மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் அச்சுறுத்தலாக இருக்கும்.உலகம் நீண்ட காலமாக ஈரானைத் திருப்திப்படுத்தி வருகிறது. ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை நிறுத்துவதில் இஸ்ரேலுடன் மற்ற நாடுகள் சேரவேண்டும்.ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதிக்க வேண்டும்.
இவ்வாறு நெகன்யாகு பேசினார்.
வீடுகளை காலி செய்யுங்கள்
இதற்கிடையே போர் பதட்டம் அதிகரித்து உள்ள லெபனானில் இருந்து ஜப்பான் தனது குடிமக்களை வெளியேறுமாறு வலியுறுத்தி உள்ளது. அவர்களை வெளியேற்ற ராணுவ விமானத்தை அனுப்ப உள்ளதாக தெரிவித்து இருக்கிறது.
இதேபோல் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, லெபனான் குடிமக்களை தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக தங்கள் வீடுகளை காலி செய்யுமாறு வலியுறுத்தி உள்ளார். இந்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள். தயவுசெய்து இப்போது தீங்கு விளைவிக்கும் வழியிலிருந்து வெளியேறுங்கள். எங்கள் செயல்பாடு முடிந்ததும், நீங்கள் உங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாக திரும்பி வரலாம் என்று தெரிவித்து இருக்கிறார். இதனால் வரும் நாட்களில் லெபனானிற்கு எதிராக மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையை எடுக்க இஸ்ரேல் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.