மும்பை தாராவியில் உள்ள குடிசைகள்தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசையாக கருதப்படுகிறது. அக்குடிசைகளை இடித்துவிட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் பணி அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் மாநில அரசோடு இணைந்து தாராவியில் உள்ள குடிசைகளை ஆய்வு செய்து முடித்துள்ளது. குடிசை மாற்றுத்திட்டத்தின் கீழ் மாற்று வீடு பெற அதானி நிறுவனம் நிர்ணயித்துள்ள புதிய விதிகளால் ஆயிரக்கணக்கானோருக்கு வீடு கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட குடிசை இருந்தாலும் அந்த நபர் பெயரில் ஒரு வீடுதான் கொடுப்போம் என்று அதானி நிறுவனம் கூறி வருகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தால் அந்த வீடுகளை உறவினர் பெயருக்கு மாற்றி எழுதும்படி நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு மிகவும் சொற்பமானவர்களுக்கு மட்டுமே தாராவிக்குள் வீடு கிடைக்கும் என்றும், எஞ்சிய அனைவருக்கும் தாராவிக்கு வெளியில் வீடு வழங்கப்படும் என்று கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் தாராவி மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தாராவி செக்டர் ஒன்றில் மாற்று வீடு பெற தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் இடம் பெற்று இருப்பவர்களுக்கு இப்போது நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 7 நாட்களுக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும், அப்படி காலி செய்யவில்லையெனில் முடிசை புனரமைப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்கு ஆகும் செலவை குடிசைவாசிகள்தான் கொடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்த்து குடிசைவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நோட்டீஸ் தாராவி செக்டர் ஒன்றில் இருக்கும் கணேஷ் நகர் பகுதி மக்களுக்கு மட்டும் முதல் கட்டமாக கொடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சாக்கடை பைப்லைன் போட இருக்கிறது. அதற்கு இடையூராக குடிசைகள் இருக்கிறது. தாராவி குடிசை மேம்பாட்டுத்திட்டத்தை நவ்பாரத் மெகா டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கூட்டு நிறுவனம் தான் நிறைவேற்றி வருகிறது. இது குறித்து நவ்பாரத் மெகா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகளிடம் பேசியபோது, `குடிசைவாசிகளுடன் வாடகை குறித்து பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் குடிசைவாசிகள் வீட்டை காலிசெய்ய மறுத்து வருகின்றனர்.