NRI Corner – 5: இந்த `3'-ம் இல்லாமல் எதில் முதலீடு செய்தும் எந்தப் பயனும் இல்லை… அந்த `3' என்ன?

Spread the love

சமீபத்தில் என்னைச் சந்திக்க ‘லாபம்’ அலுவலகத்திற்கு வந்திருந்தார் அஜ்மல். குவைத்தில் இருந்து ஒரு வார அவசரப் பயணத்தில் சென்னைக்கு வந்திருந்தவர், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு என்னை சந்திக்க வந்திருந்தார்.

குவைத்தில் என்ஜினியராக வேலை பார்த்துவரும் அஜ்மலுக்கு சம்பளம் குறைவில்லை. 35 வயதான நிலையில் இனியாவது முதலீடு செய்து பணம் சேர்த்தால்தான் எதிர்காலத்துக்குத் தேவையான பணத்தை ஓரளவுக்காவது சேர்க்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டு என்னை சந்திக்க வந்திருந்தார்.

அஜ்மலுடைய எதிர்கால இலக்குகள் என்ன, அதற்கு அவர் எவ்வளவு பணத்தை சேர்க்க வேண்டும், எந்த மாதிரியான திட்டங்களைத் தேர்வு செய்தால், அவருக்குத் தேவையான பணத்தை சேர்க்க முடியும் என்பதைப் பற்றி எல்லாம் பேசுவதற்குமுன் வழக்கம் போல நான் கேட்கும் முதல் கேள்வியைக் கேட்டேன்.

”உங்களுக்கு டேர்ம் இன்ஷுரன்ஸ் இருக்கிறதா, மெடிக்கல் இன்ஷுரன்ஸ் பாலிசியைப் போதுமான அளவு வைத்திருக்கிறீர்களா, எமர்ஜென்ஸி பணமாக எவ்வளவு லட்சத்தை வைத்திருக்கிறீர்கள்…?”

இந்தக் கேள்விகளைக் கேட்டவுடன், அஜ்மலுக்கு முகத்தில் ஏமாற்று ரேகைகள் தென்பட ஆரம்பித்தன. ”சார், நான் உங்களை சந்தித்துப் பேசவந்தது, முதலீட்டுக்கான ஆலோசனை பெறுவதற்குத்தான். ஆனால், நீங்களோ, இன்ஷுரன்ஸ் பாலிசி, எமர்ஜென்ஸி மணி என்று ஏதேதோ பேசுகிறீர்களே…!” என்று என்னைக் கொஞ்சம் ஒரு மாதிரியாகப் பார்த்தார்.

அவர் சந்தேகம் எனக்கு இயல்பானது. காரணம், முதலீடு என்று வருகிறவர்களிடம் இன்ஷுரன்ஸ் பற்றியும், எமர்ஜென்ஸி பணம் பற்றியும் பேசினால், கொஞ்சம் குழம்பித்தான் போகிறார்கள். ஆனால், ஒருவர் முதலீட்டை ஆரம்பிப்பதற்குமுன் இன்ஷுரன்ஸ் பற்றியும், எமர்ஜென்ஸி பணம் பற்றி எடுத்துச் சொல்லி, அதை முதலில் செய்ய வைக்காவிட்டால், எந்த முதலீட்டில் எவ்வளவு பணத்தை சேர்த்தும் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதைப் புரியவைப்பேன்.

Insurance (Representational Image)

”அஜ்மல், நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கத் தயாராகி இருப்பது பாராட்டுதலுக்குரிய விஷயம்தான். ஆனால், உங்களிடம் டேர்ம் இன்ஷுரன்ஸோ, போதிய அளவு மெடிக்கல் இன்ஷுரன்ஸோ இல்லாமல் முதலீடு செய்து என்ன புண்ணியம்?

அஜ்மல், நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் உங்களுக்கு ஒரு டேர்ம் இன்ஷுரன்ஸ் தந்திருக்கிறது. நீங்கள் பார்க்கும் வேலை அபாயகரமானது என்பதால், 50 லட்சம் ரூபாய் என்கிற அளவில் உங்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் தந்திருக்கிறது. இது நல்ல விஷயம்தான். ஒருவேளை, பணியில் இருக்கும்போது நீங்கள் இறக்க நேரிட்டால், உங்கள் குடும்பத்துக்கு இந்த 50 லட்சம் ரூபாய் கிடைக்கும். அதை வைத்து உங்கள் குடும்பத்தினர் அடுத்த 10, 15 ஆண்டுகளுக்கு பொருளாதார நெருக்கடி இல்லாமல் இருக்கலாம்.

ஆனால், நீங்கள் செய்துவரும் இந்த வேலை நிரந்தரமானது என்று சொல்ல முடியுமா? தற்போதுள்ள உலகச் சூழலில் யாருடைய வேலை எப்போது போகும் என்று சொல்ல முடியாது. திடீரென்று ஒருநாளை வேலை போய்விட்டால், கம்பெனி தந்த டேர்ம் இன்ஷுரன்ஸும் காலாவதியாகிவிடும். அப்போது உங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு எந்தப் பணமும் கிடைக்காது. நீங்கள் இல்லாத நிலையில், பணத்துக்கு அவர்கள் மிகவும் கஷ்டப்படவே செய்வார்கள்.

இதற்கு ஒரே தீர்வு, கம்பெனி தந்த டேர்ம் ஒரு பக்கம் இருந்தாலும், உங்களுக்கென்று 1 கோடி ரூபாய் கவரேஜ் கிடைக்கிற மாதிரி ஒரு டேர்ம் இன்ஷுரன்ஸ் பாலிசியைத் தொடங்கி, அதை தொடர்ந்து வைத்திருங்கள். உங்கள் மனைவியையும் குழந்தைகளையும் நீங்கள் உண்மையாக நேசிக்கிறீர்கள் எனில், இதைத்தான் நீங்கள் முதலில் செய்ய வேண்டும்” என்று நான் விளக்கிச் சொல்ல, ”நீங்கள் சொல்வது மிகவும் சரி” என்றார்.

நான் தொடர்ந்தேன். ”இதே போலத்தான், மெடிக்கல் இன்ஷுரன்ஸ் பாலிசி. நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் உங்களுக்கு மெடிக்கல் இன்ஷுரன்ஸ் பாலிசி தந்திருந்தாலும் உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் குறைந்தது 10 லட்சம் ரூபாய் கவரேஜ் கிடைக்கிற மாதிரி ஒரு மெடிக்கல் இன்ஷுரன்ஸ் பாலிசியைத் தனியாக வைத்திருந்தால்தான், வேலை போனபிறகும் அதை பயன்படுத்தி பயன் பெற முடியும்” என்று சொன்னபோது, ”நீங்கள் சொல்வதை மறுக்கவே முடியாது” என்றார்.

”அஜ்மல், டேர்ம் இன்ஷுரன்ஸும், மெடிக்கல் இன்ஷுரன்ஸ் பாலிசியும் எந்த அளவுக்கு முக்கியமோ, அந்தளவுக்கு முக்கியம் அவசரகால நிதி என்று சொல்லப்படும் எமர்ஜென்ஸி மணி. இப்போதுள்ள நிலையில், யார் வேலை எப்போது போகும் என்று சொல்ல முடியாது. அல்லது, வேலை பிரஷர் காரணமாக நம்முடைய வேலையை நாமே விட்டுவிடும் நிலைகூட பலருக்கும் வரவே செய்கிறது. அப்படி வேலை நீக்கம் அல்லது வேலையை விடுவது போன்ற நிலை வந்தால், அடுத்த 6 முதல் 9 மாதங்கள் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுகிற அளவுக்கான பணத்தை வைத்திருந்தால்தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும். இல்லாவிட்டால், எப்போது வேலை போகுமோ, அப்படிப் போனால், என்ன செய்து குடும்பத்தைக் காப்பாற்றுவது, அடுத்த வேலை எப்போது கிடைக்கும் என்கிற கவலைகள் எல்லாம் இல்லாமல், எந்தப் பிரச்னையையும் பதற்றம் இல்லாமல் சமாளிக்கலாம்” என்று நான் சொல்ல, அஜ்மல் இப்படிச் சொன்னார்.

Money
Money

”சார், நீங்கள் அழுத்திச் சொன்ன இந்த விஷயங்கள் எனக்கும் தெரியும். ஆனால், இதை எல்லாம் பின்னாடி பார்த்துக்கலாம் என்று நினைத்திருந்தேன். நீங்கள் சொன்னபிறகுதான், இதை முதலில் செய்துவிட்டு, பிற்பாடு முதலீடு செய்ய வேண்டும் என்று. ஒகே சார், இன்ஷுரன்ஸ், எமர்ஜென்ஸி மணி ஆகியவற்றை நான் முதலில் செய்கிறேன். இதனோடு முதலீடு செய்கிறேன்” என்று சொல்ல, அவருக்கான முதலீட்டுத் திட்டத்தைத் தந்தேன். அரை மணி நேர ஆலோசனைக்குப் பிறகு, தெளிவான திட்டமுடன் திருப்தியான மனதோடு கை குலுக்கிவிட்டுப் புறப்பட்டார் அஜ்மல்.

முதலீடு என்பது முக்கியமான விஷயம்தான். அதே சமயம், இன்ஷுரன்ஸும் எமர்ஜென்ஸி பணமும் அதைவிட முக்கியம்!

முதலீட்டு   ஆலோசனை   உங்களுக்கு   வேணுமா?

‘லாபம்’ மூலம் நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடிவு செய்துவிட்டீர்களா, இதற்கு சரியான வழிகாட்டுதல் உங்களுக்குத் தேவையா? ஆம் எனில், பின்வரும் லிங்கினை கிளிக் செய்து எங்களுடன் பேசி சரியான முதலீட்டு ஆலோசனை பெற உங்களுக்கான நேரத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். இதற்கான லிங்க்….
NRI https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

Whatsapp Groups

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான ‘லாபம்’ வாட்ஸ் அப் குரூப்பில் இணைய விருப்பமா? பின்வரும் லிங்க்கினை கிளிக் செய்யுங்கள்… https://chat.whatsapp.com/DbJob5Df5Ze1eT3cwsYN9N

Labham Whatsapp Channel

‘லாபம்’ வாட்ஸ் அப் சேனலில் இணைய விருப்பமா? பின்வரும் லிங்க்கினை கிளிக் செய்யுங்கள்…
https://whatsapp.com/channel/0029VbAPqXkIt5rnQOIS4k3o

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *