மாவட்டத்துக்கு ஒரு முதியோர் இல்லம்:  உயர் நீதிமன்றம் உத்தரவு

1308371.jpg
Spread the love

மதுரை: தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு முதியோர் இல்லம் அமைக்கும் பணியை 6 மாதத்தில் தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த அதிசயகுமார், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “தமிழகத்தில் திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, வேளாங்கண்ணி பகுதியில் உள்ள கோயில் வளாகங்கள், பேருந்து நிலையங்களில் ஆதரவற்ற முதியவர்கள் பலர் ஆங்காங்கே ஆதரவின்றி தங்கியுள்ளனர்.இவர்களை பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டம் 2009-ன் படி தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் ஆதரவற்றோர் முதியோர் காப்பகம் அமைத்து பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்கவேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், “மூத்த குடிமக்கள் பாதுகாப்புச் சட்டப்படி மாவட்டத்தில் ஒரு முதியோர் இல்லத்தை அரசு நடத்த வேண்டும். ஆனால் தமிழகத்தில் அரசால் ஒரு முதியோர் இல்லம் கூட நடத்தப்படவில்லை. முதியோர் இல்லங்கள் அனைத்தும் அரசு நிதி உதவியோடு தனியார் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. இது விதிமீறலாகும். எனவே, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு முதியோர் இல்லமாவது கட்டுவதற்கான பணிகளை 6 மாதத்தில் தொடங்க வேண்டும்,” என உத்தரவிட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *