சாதிப்பிரச்னை நாடு முழுவதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. எதாவது ஒரு வகையில் மக்கள் சாதிப்பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். காதல் திருமணங்கள்தான் இதில் அதிக அளவில் சாதிப்பிரச்னையை சந்திக்கின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சாதிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றனர். அங்குள்ள அகில்யா நகர் மாவட்டம் ஒரு காலத்தில் சாதிக்கலவரத்தால் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தது.
இந்த மாவட்டத்தில் ஆணவக் கொலை என்ற பெயரில் பட்டியல் இன மக்கள் அதிக அளவில் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2013ம் ஆண்டு சோனாய் என்ற கிராமத்தில் மூன்று பேரும், 2014ம் ஆண்டு ஜாவ்கேடே என்ற இடத்தில் மூன்று பேரும் கொலை செய்யப்பட்டனர். அப்படிப்பட்ட மாவட்டத்தில் உள்ள சவுண்டாலா என்ற கிராமம் இப்போது ஒட்டுமொத்த சாதியில் இருந்து விடுதலை பெற்று இருக்கிறது.
இக்கிராமத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பஞ்சாயத்து தலைவராகி இருக்கும் சரத்ராவ் இக்கிராம பஞ்சாயத்தை கூட்டி சாதிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்.
இக்கூட்டத்தில் ஒட்டுமொத்த கிராம மக்களும் கூடி இருந்தனர். அவர்கள் மத்தியில் பேசிய சரத்ராவ், “‘நமது ரத்தம் பச்சையோ அல்லது ஊதாவோ கிடையாது. அனைவருக்கும் ரத்தம் சிவப்புதான். ஒரு முறை இரண்டு ரத்தம் ஒன்றாக கலந்து விட்டால் அதனை தனியாக பிரிக்க முடியாது”என்று கூறினார்.
அதோடு கிராமத்தை சாதியில்லாத கிராமமாக மாற்றும் தீர்மானத்தை சரத்ராவ் கொண்டு வந்தார். இத்தீர்மானத்திற்கு அங்கு கூடியிருந்த அனைத்து சாதியினரும் ஆதரவாக வாக்களித்தனர். இதனால் இது ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. “இனிமேல் சவுண்டாலா கிராமத்தில், யாரும் சாதியைப் பின்பற்றவோ அல்லது எந்த வகையான சாதி நடைமுறைகளிலும் ஈடுபடவோ மாட்டார்கள். மாறாக, கிராமவாசிகள் பின்பற்றும் ஒரே மதம் மனிதநேயம் மட்டுமே” என்று அத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தீர்மானம் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை மையமாகக் கொண்டிருந்தது. சவுண்டாலா கிராமத்தில் சாதி, மதம், இனம் அல்லது பரம்பரை அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்காது என்றும், அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்றும் அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு சேவைகள், நீர் ஆதாரங்கள், கோயில்கள், தகன மைதானங்கள், பள்ளிகள் மற்றும் சமூக விழாக்கள் உட்பட அனைத்து பொது இடங்கள், விழாக்களில் பாகுபாடு இல்லாமல் அனைவரும் பங்கேற்கலாம்.