பாரிஸில் பாராலிம்பிக்ஸ் தொடர் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்திய வீரர் வீராங்கனைகள் சிறப்பாக ஆடி பதக்கங்களை குவித்து வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த சில வீரர் வீராங்கனைகளும் சிறப்பாக ஆடியிருக்கிறார்கள்.
குறிப்பாக, பேட்மிண்டனில் துளிசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ ஆகிய மூன்று வீராங்கனைகள் ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தனர். பாரிஸில் அவர்களின் ஆட்டம் முடிந்ததைத் தொடர்ந்து நேற்று அவர்கள் சென்னை வந்திருந்தனர். அவர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
துளசிமதி பேசுகையில், “இறுதிப்போட்டியில் சீன வீராங்கனையுடன் தோற்றது வருத்தம்தான். ஆனால், நான் தங்கத்தை இழந்துவிட்டதாக நினைக்கவில்லை. வெள்ளியை வென்றிருக்கிறேன். அடுத்தடுத்து இன்னும் சிறப்பாக ஆடுவேன். சிறுவயதிலிருந்தே என்னுடைய அப்பாதான் என்னுடைய ஹீரோ. அவர்தான் எனக்கு பேட்மிண்டன் ரேக்கட்டை பிடிக்கவே கற்றுக்கொடுத்தார்.
13 வருடங்களாக அவர்தான் எனக்கு பேட்மிண்டன் கற்றுக்கொடுத்தார். எவ்வளவோ சிரமங்களை எதிர்கொண்ட போதும் என்னை விளையாட்டிலிருந்து பின்வாங்கவிடவில்லை. அவர் இல்லையென்றால் நான் இல்லை.
பாராலிம்பிக்ஸ் போன்ற பெரிய தொடர்களுக்கு தயாராக வேண்டும் என்பதற்காக கோபிசந்த் அகாடெமியில் இணைந்தேன். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் எங்களுக்கு பெரியளவில் உதவிபுரிந்தது. அதற்காக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாற்றுத்திறனாளிகள் மன உறுதியோடு வெளியே வந்து போராட வேண்டும். இப்போது மாற்றுத்திறனாளிகளுக்கும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கிறது. துணிச்சலாக தடைகளை தகர்த்து அந்த வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.’ என்றார்.
மனிஷா ராமதாஸ் பேசுகையில், ’10 வயது இருக்கும்போதே பேட்மிண்டன் ஆட தொடங்கிவிட்டேன். ஆனால், அப்போது இந்த விளையாட்டை ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாகத்தான் பார்த்தேன். கடந்த சில வருடங்களாகத்தான் தீவிரமாக ஆடி வருகிறேன். நான் இந்த இடத்திற்கு வந்து சேர நிறையவே உழைத்திருக்கிறேன். எங்கள் குடும்பம் நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறை வெளிநாடுகளுக்கு சென்று ஆடவும் பொருளாதாரரீதியாக ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறோம். எனக்கு உதவிய ஸ்பான்சர்களுக்கும் மத்திய மாநில அரசுகளுக்கும் நன்றி.
இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் நிறைய திறமைசாலிகள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எந்த தயக்கத்தையும் வெளிக்காட்டாமல் போராடி வெல்ல வேண்டும். இப்போது வெண்கலம் வென்றிருக்கிறேன். லாஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக்ஸில் கட்டாயம் தங்கம் வெல்வேன்.’ என்றார்.
நித்ய ஸ்ரீ பேசுகையில், ‘பாரிஸ் பாராலிம்பிக்ஸில் வெண்கலம் வென்றிருக்கிறேன். நான் இவ்வளவு உழைத்தே வெண்கலம்தான் கிடைத்திருக்கிறது எனில் தங்கத்திற்காக எவ்வளவு உழைக்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டேன். 2016 இல் பி.வி.சிந்து பேட்மிண்டனில் ஒலிம்பிக்ஸ் வெள்ளிப்பதக்கம் வென்றபோதுதான் எனக்கு ஒரு ஊக்கம் கிடைத்தது. அப்போதுதான் பேட்மிண்டன் ரேக்கட்டை கையில் எடுத்தேன். முதலில் பாரா விளையாட்டுகளைப் பற்றியெல்லாம் தெரியாது. மெதுமெதுவாகத்தான் அதைப்பற்றி தெரிந்துகொண்டு பயிற்சிகளில் ஈடுபட்டேன்.
3 ஆண்டுகள் வீட்டை பிரிந்து லக்னோவில் இருந்தே பயிற்சி செய்தேன். அதெல்லாம் ரொம்பவே கடினமான காலக்கட்டம். ஆனால், இந்த வெண்கலம் எல்லா கஷ்டங்களையும் மறக்கடித்துவிட்டது. லாஸ் ஏஞ்செல்ஸில் இன்னும் சிறப்பாக ஆட முயற்சிப்பேன்.’ என்றார்.