750-வது நாளை எட்டும் பரந்தூர் போராட்டம்

1291690.jpg
Spread the love

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் நடைபெற்று வரும் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டம் இன்னும் ஒரு வாரத்தில் 750-வது நாளை எட்டுகிறது. இதையொட்டி, சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று தங்களுக்கு ஆதரவாகப் பேச பிரேமலதா விஜயகாந்தை அழைக்க போராட்டக் குழு சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அந்தப் பகுதியில் உள்ள ஏரி, குளங்கள், விவசாய நிலங்கள், குடியிருப்புகள் என மொத்தம் 13 கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரத்தை மையமாக வைத்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டம் வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி 750-வது நாளை எட்டுகிறது.

கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க முடிவு: இது குறித்து போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.எல்.இளங்கோ கூறியது: “போராட்டத்தின் 750-வது நாளையொட்டி பிரமேலதா விஜயகாந்தை அழைக்க போராட்டக் குழு சார்பில் முடிவு செய்தோம். ஆகஸ்ட் 15-ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடப்பதாலும், 750-வது நாள் நிறைவடைந்ததை ஒட்டி ஆகஸ்ட் 15-ம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்தப் போராட்டத்துக்கு தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்தை அழைப்போம். மேலும் அன்றைய தினம் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்திலும் அவரை பங்கேற்கச் செய்து எங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க கோரிக்கை வைப்போம்” என்றார்.

மறு குடியமர்வுக்கான பணிகளும் தீவிரம்: இவர்களது போராட்டம் ஒருபக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், புதிய பசுமை விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும்போது பாதிக்கப்படும் மக்களை மறுகுடியமர்வு செய்வதற்கான பணிகளையும் அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த விமான நிலையத்தால் பாதிக்கப்படும் பரந்தூர், ஆ.தண்டலம், நெல்வாய், ஏகனாபுரம் மற்றும் மகாதேவிமங்கலம் ஆகிய 5 கிராமங்களைச் சேர்ந்த 1060 குடும்பங்களை மறுகுடியமர்வு செய்ய சிறுவள்ளூர், மடப்புரம், மதுரமங்கலம், மகாதேவிமங்கலம் ஆகிய கிராமங்களில் 238 ஏக்கர் நிலம் எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள் நாராயணன், ஹரிதாஸ் ஆகியோர் இன்று (ஆக.7) ஆய்வு செய்தனர். ஒரு பக்கம் போராட்டமும், மறு பக்கம் மறு குடியமர்வுப் பணியும் தீவிரமடைந்துள்ள நிலையில் ஏகனாபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் பரபரப்படைந்துள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *