அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐ.பி.எல், கிரிக்கெட் போட்டிக்கு சென்னை அணி புதிதாக கார்த்திக் சர்மா என்ற வீரரை ரூ.14.20 கொடுத்து ஏலத்தில் வாங்கி இருக்கிறது. 19 வயதாகும் இளம் வீரரான கார்த்திக் சர்மா, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். மிகவும் அடிமட்டத்தில் இருந்து கடினமாக போராடி தனது தந்தையின் வழிகாட்டுதலில் சர்மா இந்த இடத்திற்கு வந்துள்ளார்.
கார்த்திக் சர்மா தனது கிரிக்கெட் வாழ்க்கையை சிறுவயதிலேயே தொடங்கினார். இது குறித்து கார்த்திக் தந்தை மனோஜ் கூறுகையில், “‘எங்களது குடும்பம் மிகவும் நடுத்தரமானது. ஆனாலும் நானும், எனது மனைவியும் கார்த்திக்கை என்ன செலவானாலும் கிரிக்கெட் வீரராக்க வேண்டும் என்று கனவு கண்டோம்.
கார்த்திக் பயிற்சி மற்றும் போட்டிகளுக்காக எங்களது விவசாய நிலம் மற்றும் வீடு கட்ட பயன்படக்கூடிய நிலத்தை விற்பனை செய்தோம். கார்த்திக் தாயார் தனது நகைகளை விற்பனை செய்தார். இது எங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது. ஆனாலும் கார்த்திக் கனவை நனவாக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.
ஒரு முறை குவாலியரில் நடந்த கிரிக்கெட் போட்டியில் விளையாட கார்த்திக் சென்று இருந்தான். அவனுடன் நானும் சென்று இருந்தேன். அவனது அணி தோல்வி அடையும் நிலையில் இருந்தது.
பட்டினியோடு உறங்கினோம்
கார்த்திக்கின் சிறப்பான செயல்பாடு காரணமாக அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அன்றைக்கு நாங்கள் ஹோட்டலில் தங்குவதற்கு கூட எங்களிடம் பணம் இல்லை. இதனால் வீடு இல்லாதவர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டு இருந்த இடத்தில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்றைக்கு சாப்பிடக்கூட எங்களிடம் பணம் இல்லை. இதனால் இரவில் பசியோடு உறங்கினோம். காலையில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற பிறகுதான் அதில் கிடைத்த பணத்தின் மூலம் எங்களால் ஊருக்கு செல்ல முடிந்தது.
கார்த்திக் இரண்டரை வயதாக இருந்தபோது பேட்டால் பந்தை ஓங்கி அடித்தான். அந்த பந்து ஒரு போட்டோ மீது விழுந்து இரண்டாக உடைந்தது. அதனை பார்த்தபிறகுதான் கார்த்திக்கிற்கு கிரிக்கெட்டில் திறமை இருக்கிறது என்று தெரிந்து கொண்டோம்.