Pasumai Vikatan – 10 April 2026 – மத்திய அரசின் துரோகச் சுற்றறிக்கை… அம்பலப்படுத்திய கேரள எம்.பி!

Spread the love

கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டோஸ், நாடாளுமன்றத்தில் எழுப்பிய நட்சத்திரக் கேள்வியும், அதற்கு மத்திய அரசு அளித்துள்ள பதிலும் இந்தியாவெங்கும் உள்ள விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளுக்கு மத்திய அரசு செய்யத் துணிந்துள்ள துரோகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

`நெல், கோதுமை உள்ளிட்ட விளைபொருள்களுக்கு மத்திய அரசு வழங்கும் குறைந்த பட்ச ஆதார விலையைவிட, அந்தந்த மாநில அரசுகள் கூடுதல் ஊக்கத் தொகை வழங்கக் கூடாது என மத்திய அரசின் சார்பில் கேரளா உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா?’ என ஜான் பிரிட்டோஸ் கேள்வி எழுப்பினார்.

மத்திய நிதி அமைச்சகம், `நம் நாட்டில் நெல், கோதுமை ஆகிய பொருள்கள் நம்முடைய தேவைக்கும் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. இது குறைக்கப்பட வேண்டும்; இந்தியாவில் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இப்படியொரு சுற்றறிக்கை மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என பதில் அளிக்க, ‘இது விவசாயிகளின் உரிமைக்கு எதிரான உத்தரவு’ என விவசாயிகள் சங்கத் தலைவர்கள் கொந்தளிக்கிறார்கள்.

`நெல், கோதுமை உள்ளிட்ட விளைபொருள்களுக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்யும் குறைந்தபட்ச ஆதார விலை போதுமானதாக இல்லை. இதனால்தான், உற்பத்திச் செலவை ஓரளவுக்கு ஈடு கட்டும் வகையில் அந்தந்த மாநில அரசுகள் ஊக்கத் தொகை வழங்கி வருகின்றன. தமிழ்நாட்டில், இந்த ஊக்கத்தொகையும்கூட நியாயமானதாக இல்லை. இதையும் வழங்கக் கூடாது என மத்திய அரசு சொல்வது, விவசாயிகளுக்கு இழைக்கப்படும் மிகப்பெரும் அநீதி’ என்றவர்கள்,

`அதிகளவில் மக்கள்தொகை கொண்டுள்ள நம் நாடு, உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதோடு கூடுதல் உற்பத்தி செய்து கையிருப்பில் வைத்துக்கொள்வது அவசியமற்ற ஒன்றா? நெல், கோதுமை ஆகியவை தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியை ஈட்டலாம். விவசாயிகளுக்கும் கூடுதல் விலை கிடைக்கும். எரிபொருள் தேவைக்குப் பிற நாடுகளை சார்ந்தில்லாமல் நெல், கோதுமை ஆகியவற்றிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்யலாம். பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரிக்க சிறப்புத் திட்டங்களைச் செயல் படுத்தலாம்’ என அடுக்கடுக்கான ஆலோசனைகளை முன்வைக்கிறார்கள்.

இந்தியாவில் உள்ள விளைநிலங்களில் நெல், கோதுமை ஆகியவைதான் அதிகப்பரப்பில் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை நிறுத்தினால், விவசாயிகள் நஷ்டம் அடைந்து, விளைநிலங்களை விட்டு வெளியேறுவார்கள். அப்படி வெளியேறும்பட்சத்தில் விளைநிலங்களைக் கைப்பற்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாராக உள்ளன.

இந்த நிறுவனங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில்தான் மத்திய அரசு, ஊக்கத்தொகை விஷயத்தில் இப்படியொரு சுற்றறிக்கையை மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளதாக விவசாய செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதுகுறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி-க்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை என தமிழக விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

மத்திய அரசு, ஊக்கத்தொகை துரோகச் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும்.மாநில அரசு, அதற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.

– ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *