Pasumai Vikatan – 10 January 2026 – ஏற்றுமதிக்கு ஏற்ற வாழை ரகங்கள்; மஞ்சள் சாகுபடிக்கு கொடுக்கும் கருவிகள்; கவனம் ஈர்த்த கருத்தரங்கம்!|Banana varieties suitable for export; equipment provided for turmeric cultivation;

Spread the love

“வாழை+ மஞ்சள் சாகுபடி… லாபம் கொடுக்கும் இயற்கை விவசாயம்’ என்ற தலைப்பில் பசுமை விகடன் ஏற்பாடு செய்த கருத்தரங்கம், ஈரோடு மாவட்டம், நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. ஈரோடு, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த முந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை, தி அக்ரி வேர்ல்டு நிறுவனம் இணைந்து வழங்கியது. சத்யம் அக்ரோ கிளினிக், எச்.டி.எஃப்.சி பேங்க், நன்னீர் (என்.பி) டிரிப் இர்ரிகேஷன், கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய அமைப்புகளும் தங்களுடைய ஆதரவை வழங்கியிருந்தன.

கலந்துகொண்டோர்

கலந்துகொண்டோர்

தொடக்கவுரை ஆற்றிய கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளையின் துணைத் தலைவரும் மருத்துவருமான ஆர்.குமாரசுவாமி, “ஒரு காலத்தில் பெரும்பான் மையான மக்கள் மிகவும் விரும்பி செய்யக் கூடிய முதன்மைத் தொழிலாக விவசாயம் இருந்து வந்தது. ஆனால், இன்று மாற்றுத் துறையினரின் பகுதிநேர மற்றும் ஓய்வுகாலத் தொழிலாகவும், வாழ்வா தாரத்திற்கு வேறு வழியில்லை என்ற இக்கட்டில் உள்ள விவசாயிகளின் கட்டாயத் தொழிலாகவும் விவசாயம் மாறிப்போய்விட்டது. செயற்கை உரங்களுக்காகச் செலவு செய்துவிட்டு விளைவித்த பொருள்களுக்கு போதிய விலை கிடைக்காதபோது, அந்த விவசாயி கடுமையான நஷ்டத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது. இதைச் சரி செய்ய இயற்கை விவசாயப் பக்கம் சென்றால்தான், லாபகரமான விவசாயத்தைச் செய்ய முடியும். அதற்கு இந்தக் கருத்தரங்கம் மிகவும் பயனுள்ளதாக அமையும்” என்றார். தொடர்ந்து கல்லூரியின் தாளாளர் பி.சச்சிதானந்தன், முதல்வர் வாசுதேவன், குமாரசுவாமி மற்றும் பேச்சாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இக்கருத்தரங்கில் உரையாற்றிய திருச்சி, தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி சு.பாக்யராணி, “தமிழ்நாட்டில் நேந்திரன், செவ்வாழை, பூவன், நெய்ப்பூவன், கற்பூரவள்ளி, ரஸ்தாளி, ஜி.9 ஆகிய ரகங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. வாழை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள், நோய்த்தாக்கம் இல்லாத விதைக் கிழங்குகளைத் தேர்ந்தெடுத்து நடவு செய்வது மிகவும் அவசியமானது. இதைச் சரியாக செய்துவிட்டாலே, 50 சதவிகித வெற்றி முன்கூட்டியே உறுதியாகிவிடும்.

அரங்குகளில்

அரங்குகளில்

வாடல் நோய் மற்றும் பூச்சித் தாக்குதல் களைக் கட்டுப்படுத்த, ஒரே ரக வாழையைத் தொடர்ச்சியாகப் பயிரிடுவதைத் தவிர்த்து ரகங்களை மாற்றி பயிர் செய்ய வேண்டும். திருச்சி, தேசிய வாழை ஆராய்ச்சி மையம், மலைப் பகுதியில் அதிகம் விளையும் கருவாழையில் இருந்து மேம்படுத்தப்பட்ட ‘காவேரி சுகந்தம்’ என்ற ரகத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரகமானது, இலைப்புள்ளி நோய் மற்றும் தண்டுத் துளைப்பான் தாக்குதலுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, மற்றொரு வாழை ரகமான ‘காவேரி கன்யா’, வாடல் மற்றும் இலைப்புள்ளி நோய்க்கு அதிக எதிர்ப்புத் திறன் கொண்டது. இந்த ரகத்தின் காய்களைச் சமையலுக்கும் பயன்படுத்தலாம்… பழுக்க வைத்து பழமாகவும் சாப்பிடலாம். தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் மற்றொரு வெளியீடான ‘காவேரி காஞ்சன்’ ரகத்தில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த ரகம் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.

அரங்குகளில்

அரங்குகளில்

‘காவேரி வாமன்’ என்ற ரகம், சூறாவளிக் காற்றுக்கும் கூட தாக்குப்பிடித்து நிற்கும். இது, 1.5 மீட்டர் உயரம் வரை மட்டுமே வளரும். குட்டையாக இருப்பதால் முட்டுக் கொடுக்கத் தேவையில்லை. இதனால், சாகுபடி செலவு குறையும். எங்கள் ஆராய்ச்சி மையத்தின் மற்றொரு வாழை ரகமான ‘உதயம்’ ஏற்றுமதிக்கு உகந்தது. களர் மற்றும் உவர் நிலங்களிலும், வறட்சியான பகுதிகளிலும் சாகுபடி செய்வதற்கு ‘காவேரி சபா’ ரக வாழை உகந்தது. அந்தந்தப் பகுதிகளில் உள்ள மண்ணின் தன்மை, இயற்கை இடர்பாடுகள் மற்றும் சந்தை நிலவரம் ஆகியவற்றைப் பொறுத்து ரகத்தைத் தேர்ந்தெடுத்தால் வெற்றி நிச்சயம்” என்றார்.

மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி த.செந்தில்குமார், “தற்போதைய சூழலில் கருவிகளின்றி விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. விதைப்பு காலத்தில் எந்தளவிற்கு கருவிகள் மிக அவசியமாகத் தேவைப்படுகிறதோ அதைவிடவும், அறுவடைக்குப் பின் கருவிகளின் தேவை மிக அதிகமாக உள்ளது. மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் மற்ற நிறுவனங்களுடன் இணைந்து நவீன வேளாண் கருவிகளைக் கண்டுபிடித்துள்ளது.

சத்யம் அக்ரோ கிளினிக் சார்பில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசு

சத்யம் அக்ரோ கிளினிக் சார்பில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசு

வாழை விவசாயத்திற்குப் பயன்படக்கூடிய குழி தோண்டும் கருவி, திசு வாழை நடும் கருவி, வாழை கட்டை சீவும் கருவி ஆகியவை மானிய விலையில் கிடைக்கின்றன. மருந்து உட்செலுத்தும் கருவி, துல்லியமாக உரமிடும் கருவி, வாழைக்குலை அறுவடை செய்யும் கருவி, அறுவடை செய்த வாழை மரத்தைத் தூளாக்கும் கருவி, மண்புழு உரம் தயாரிப்புக்குப் பயன்படக்கூடிய கருவி, வாழை மரத்திலிருந்து நார் பிரித்தெடுக்கும் கருவி, வாழைச்சாறு எடுக்கும் கருவி, வாழைக்கயிறு திரிக்கும் கருவி என இன்னும் பலவிதமான நவீன கருவிகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெற வேண்டும்.

மஞ்சள் சாகுபடியைப் பொறுத்த வரை… விதைக்கிழங்கு விதைப்புச் செய்யும் கருவி, அறுவடைக் கருவி, மஞ்சள் வேக வைக்கும் கலன்கள், மஞ்சள் கிழங்கு சுத்தப்படுத்தும் கருவி, சோலார் மூலம் மஞ்சள் கிழங்கை உலர வைக்கும் கருவி ஆகியவை உள்ளன. இவற்றைப் பயன்படுத் துவதன் மூலம் விவசாயிகளின் உழைப்பு, நேரம், பணம் ஆகியவை சிக்கனப்படுத்தப் படும். குறிப்பாக, சோலார் டிரையர் மூலம் 36 மணி நேரத்தில் 700 கிலோ மஞ்சள் கிழங்குகளை உலர வைக்க முடியும்” என்றார்.

மேடையில் பேச்சாளர்கள்

மேடையில் பேச்சாளர்கள்

மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப் பாளர் முனைவர் அழகேசன், “விவசாயிகள், தங்களுடைய அன்றாட அனுபவங்களையும், தொழில்நுட்பங்களையும், கண்டுபிடிப்புகளையும் ஆவணப் படுத்த வேண்டும். இதற்கான பயிற்சி, எங்கள் வேளாண் அறிவி யல் நிலையத்தில் வழங்கப்படுகிறது. ஆவணப்படுத்துதல் மூலம், சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு ராயல்டி தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆவணப்படுத்து தலில் ஈடுபடும் விவசாயிகள், பயிற்றுநர்களாகவும் மாற வேண்டும். இதன் மூலம் மற்ற விவசாயிகளும் பயன்பெற முடியும்” என்றார். தொடர்ந்து கல்லூரி சார்பில் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது.

வருகைப்பதிவு

வருகைப்பதிவு

மதிய அமர்வில் பேசிய ஈரோடு மாவட்டம், தாளவாடியைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி சக்திவேல், “மஞ்சள் சாகுபடியை இயற்கை விவசாயத் தின் மூலம் செய்ததால் இரட்டிப்பு லாபத்தைப் பெற்றேன். இயற்கை விவசாயத்தின் மூலம் கிடைக்கும் மஞ்சளில் அதிக அளவு குர்குமின் இருக்கும். என்னுடைய மஞ்சள் 4% முதல் 7% குர்குமின் இருப்பதால் மற்ற மஞ்சளை விட அதிக லாபத்தைப் பெற்றுத் தருகிறது. மஞ்சள் சாகுபடியைப் பொறுத்த வரை களைகளைக் கட்டுப்படுத் துவது மிகவும் அவசியம். ஆனால், இதற்கு ஆள்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. இதற்குத் தீர்வுக் காண மாட்டுச் சிறுநீர், கடுக்காய் ஆகியவற்றைப் பயன்படுத்தி, இயற்கை முறையில் களைக்கொல்லி தயார் செய்து பயன்படுத்தலாம்” என்றார்.

சக்திவேல்

சக்திவேல்

ஈரோட்டைச் சேர்ந்த இயற்கை விவசாயி சண்முகசுந்தரம், “மேட்டுப் பாத்தி முறையில் விவசாயம் செய்வதற்கு நிலத்தை ஐந்து முறை நன்றாக உழுது தயார் செய்வது அவசியமாகும். ஒரு ஏக்கர் பரப்பளவில் சுமார் 250 மேட்டுப்பாத்திகள் வரை அமைக்கலாம். இந்த முறையைப் பின்பற்றுவதன் மூலம் ஏக்கருக்குச் சுமார் 3,000 வாழைத்தார்கள் வரை அறுவடை செய்ய வாய்ப்புள்ளது. ஒருமுறை மேட்டுப்பாத்தி அமைத்துவிட்டால், இருபத்தைந்து ஆண்டுகள் வரை மாற்றமின்றிப் பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும்.

குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சி தொடங்கிவைத்தல்

குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சி தொடங்கிவைத்தல்

வாழை விவசாயிகளின் பெரும் கவலையான காற்றில் மரங்கள் சாய்வது, இந்த மேட்டுப்பாத்தி முறையில் பெருமளவு குறைக்கப்படுகிறது. இந்த மேட்டுப்பாத்தி முறையில் இரண்டரை அடி உயரத்துக்கு மண்ணைக் கொட்டி அதில் 4 வாழைக் கன்றுகள் ஒரே நேரத்தில் நடவு செய்யப்படுகின்றன. 13 அடி இடைவெளி விட்டு அடுத்து வாழைக்கன்றுகள் நடவு செய்யப் படுகின்றன. கிழக்கு மேற்காகவும், தென்கிழக்கு வட கிழக்காகவும் கோலம் போடுவது போன்று மரங்கள் நடப்படுகின்றன. மரங்கள் வளர்ந்து காட்டைப்போல காற்றே நுழையாதவாறு அடர்ந்து இருக்கும். பாத்திகளுக்கிடையேயான இடைவெளியில் மழைநீர் வெளியேறிவிடும்” என்றார்.

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் விவசாய கடன் பிரிவு தலைவர் பிரபாகரன் மற்றும் கருங்கல்பாளையம் கிளையின் மேலாளர் திருப்பதி ஆகியோர் ஹெச்.டி.எஃப்.சி வங்கி வழங்கிவரும் கடன் வசதிகள் குறித்துப் பேசினார்கள். தேனியைச் சேர்ந்த நன்னீர் வளம் நிறுவனத்தின் தலைவர் சி.பகீரதன் உப்பு பிரித்தெடுக்கும் கருவி குறித்துப் பேசினார்.

கலந்துகொண்டவர்களுக்குத் தேநீர்

கலந்துகொண்டவர்களுக்குத் தேநீர்

திருச்சி, தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி க.ஜெ.ஜெயபாஸ்கரன், “ பெரும்பாலான விவசாயிகள் அறுவடைக்குப் பிறகு வாழைத் தார்களை நிலத்திலிருந்து அகற்றிவிடுகி ன்றனர். இந்த இழப்பைத் தவிர்க்க, அறுவடை முடிந்த பின் வாழை மரத்தின் பாகங்களை நிலத்திலேயே போட்டு மட்கச் செய்ய வேண்டும். இத்தகைய கழிவுகளை நிலத்தி லேயே பயன்படுத்துவதன் மூலம், மண்ணிற்குத் தேவையான பொட்டாசியம் சத்து இயற்கையாகவே மீட்டெடுக்கப்படுகிறது” என்றார். ஈரோடு தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் வி.பிரியா மஞ்சள் சாகுபடியில் தேர்ந்தெடுக்க வேண்டிய ரகங்கள் குறித்து வழிகாட்டுதல்களை வழங்கினர். நிறைவாக, விவசாயிகள் கேட்ட கேள்விகளுக்குப் பதில்கள் அளிக்கப்பட்டன.

பங்கேற்றவர்களின் கருத்துகள்

ஶ்ரீராம், திருவாரூர்: “இயற்கை விவசாயம் தொடர்பா பல சந்தேகங்கள் இருந்துச்சு. இந்த நிகழ்ச்சியில கலந்துகிட்டது மூலம் நிறைய தெரிஞ்சிக்கிட்டேன். குறிப்பா, மஞ்சள் சாகுபடி தொடர்பான தொழிநுட்பங்கள் பயனுள்ளதா இருந்துச்சு.”

கோபாலகிருஷ்ணன்

கோபாலகிருஷ்ணன்

கோபாலகிருஷ்ணன், ஈரோடு: “இயற்கை விவசாயிகளோட அனுபவத்தை தெரிஞ்சுக்கத்தான் இந்த நிகழ்ச்சியில கலந்துகிட்டேன். விவசாயி சக்திவேல் அய்யாவோட பேச்சு எங்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தந்துச்சு.”

காளிதாஸ், பெங்களூரு: “வாழை மற்றும் மஞ்சள் சாகுபடி தொடர்பா, புதிய தகவல்களை நிறைய தெரிஞ்சுகிட்டேன். உணவு, தேநீர், சிறுதானிய பிஸ்கட்னு கல்லூரி தரப்பின் உபசரிப்பும் சிறப்பா இருந்துச்சு. மொத்தத்துல இதுவொரு மனநிறைவான நிகழ்ச்சியா இருந்துச்சு.”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *