கோயில்களில் நந்தி, மயில் போன்ற கடவுள்களின் வாகனங்கள் அல்லது கடவுள்களிடம் எப்போதும் இருக்கும் விலங்குகள், பறவைகளுக்கு சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். ஆனால் ராஜஸ்தானில் ஒரு கிராமத்தில் புல்லட்டிற்கு கிராம மக்கள் கோயில் கட்டி கும்பிட்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகில் உள்ள பாலி என்ற நகரத்தில் இருந்து 53 கிலோமீட்டர் தொலைவில் சாலையோரம் புல்லட் பாபா கோயில் இருக்கிறது. இக்கோயிலில் புல்லட் ஒன்றுக்கு மாலை அணிவித்து பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் கட்டாயம் இக்கோயிலுக்கு சென்று வருவது வழக்கம். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, “1988ம் ஆண்டு புல்லட்டில் அந்த வழியாக ஓம் சிங் ரத்தோட் என்பவர் சென்று கொண்டிருந்தார். வழியில் அவரது புல்லட் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி ரத்தோட் இறந்து போனார்.
காணாமல் போன புல்லட்
இது குறித்து கேள்விப்பட்ட போலீஸார் உடனே விரைந்து வந்து விபத்துக்குள்ளான புல்லட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அடுத்த நாள் அந்த புல்லட் போலீஸ் நிலையத்தில் இல்லை. அதேசமயம் விபத்து நடந்த இடத்தில் அந்த புல்லட் கிடந்தது. இதையடுத்து போலீஸார் மீண்டும் அந்த புல்லட்டை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர். ஆனால் திரும்பவும் விபத்து நடந்த இடத்திற்கே அந்த புல்லட் வந்தது. தொடர்ந்து இது போன்று போலீஸ் நிலையத்திற்கு எடுத்து செல்வதும், மீண்டும் அது விபத்து நடந்த இடத்திற்கு வருவதுமாக இருந்தது.
ஆனால் எப்படி வருகிறது என்பது மர்மமாக இருந்தது. ஒரு நாள் போலீஸார் புல்லட்டில் இருந்த பெட்ரோலை எடுத்துவிட்டு செயினால் கட்டிப்போட்டனர். அப்படி இருந்தும் புல்லட் மாயமானது. விபத்து நடந்த இடத்திற்கே வந்தது.