விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாமகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று திமுக இளைஞரணிச் செயலரும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து தும்பூர், நேமூர் பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அரசு நகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், இதுவரை அரசுப் பேருந்துகளில் 500 கோடி பயணம் நடைபெற்றுள்ளது.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை 2.72 லட்சம் மாணவிகள் பயன்பெற்றிருக்கின்றனர்.
முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். இத்திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படவுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1.16 கோடி மகளிர் பயன்பெற்று வருகின்றனர்.
தேர்தலின் போது அறிவித்த திட்டங்களை செயல்படுத்தி, சொன்னதை செய்த அரசாக வந்து உங்களிடம் வாக்கு சேகரிக்கிறோம்.
வடமாநிலங்களைச் சேர்ந்த மக்கள் நீட் தேர்வின் குளறுபடி குறித்து புரிந்திருக்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற முழக்கம் ஒவ்வொரு மாநிலமாக எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முதல் முதலாக குரல் கொடுத்தவர்.