அதைப் பயன்படுத்தி அவளுடன் உடல் ரீதியாகத் தொடர்பு வைத்துக் கொள்கிறான் நீல். ஆனால், அவனைக் காதலிக்கும் ராணியோ, அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாக ரிஷுவை விவாகரத்து செய்துவிட்டு நீலைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து தன் காதலை நீலிடம் சொல்கிறாள். பயந்துபோன நீல் அந்த வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகிறான். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராணி, தன் கணவனிடம் நடந்த எல்லாவற்றையும் சொல்லி மன்னிப்பு கோருகிறாள். ஏற்கெனவே ராணி மீது வெறுப்பிலிருந்த ரிஷுவுக்கு நீலுடன் அவள் நெருக்கமாக இருந்த விஷயத்தை கேட்டதும் அதை வைத்தே அவளை நிராகரிக்கிறான். ஆனாலும், அவன் திட்டுவதைப் பொறுத்துக்கொண்டு கணவனை ஆழமாகக் காதலிக்கிறாள் ராணி. ஒரு கட்டத்தில் ரிஷுவும் ராணி மீது காதலாகிறான். இருவரும் சந்தோஷமாக தங்கள் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறார்கள்.
மீண்டும் அந்த வீட்டுக்கு வரும் நீலால் இவர்கள் மணவாழ்க்கைக்குப் பிரச்னை வர, அவர்கள் இருவரும் எதேச்சையாக நீலைக் கொன்று விடுகிறார்கள். போலீஸிடமிருந்து தப்பிக்க கேஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து நீலின் உடலுக்குப் பக்கத்தில் தன் கையையும் வெட்டிவைத்துவிட்டு, தன் மனைவி ராணியுடன் கங்கையாற்றில் குதித்து தப்பித்து வேறு ஊருக்குப் போகிறான் ரிஷு. கை இல்லாவிட்டாலும் சந்தோஷமாக அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது அந்த தம்பதி. இங்கு இறந்துபோனது ரிஷுதான் என முடிவுக்கு வந்து கேஸை முடித்து வைக்கிறது போலீஸ். படத்தின் க்ளைமாக்ஸில் விசாரணை அதிகாரிக்கு ஓர் உண்மை தெரிய வருகிறது.
தினேஷ் பண்டிட் என்ற க்ரைம் எழுத்தாளரின் கதையில் வருவதைப்போல கணவனும் மனைவியும் சேர்ந்து நீலைக் கொன்று சடலத்தை மறைக்க விபத்தை செட் செய்திருக்கிறார்கள். ஆனால், ஆதாரம் இல்லாமல் அவரால் எதையும் செய்ய முடியவில்லை. போலீஸ் விசாரணையின்போது தினேஷ் பண்டிட்டின் படைப்புகளைப் பற்றி அடிக்கடி ராணி பேசுவதை வைத்து இந்தக் கொலைக்கான ஆணிவேர் தினேஷ் பண்டிட்டின் நாவல் என்று அவர் உணர்வதோடு படம் முடிகிறது.