வானில் ஒரு மாயாஜாலக் காட்சி
பிரபஞ்சத்தின் முடிவில்லா ரகசியங்களில் ஒன்றாக, வரும் 2026 பிப்ரவரி 28, சனிக்கிழமை அன்று வானில் ஒரு மாயாஜாலக் காட்சி அரங்கேறப் போகிறது.
விண்வெளி என்பது வெறும் இருள் சூழ்ந்த வெற்றிடமல்ல, அது ஒரு பிரமாண்டமான மேடை என்பதை நிரூபிக்கும் வகையில், சூரிய குடும்பத்தின் ஆறு கோள்கள் அணிவகுத்து நிற்கின்றன. நாம் அன்றாடம் பார்க்கும் வானம், இந்தச் சில நாள்களில் மட்டும் பல கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும் கோள்களை ஒரே நேர்க்கோட்டில் கோத்து, ஓர் அபூர்வ விண்வெளி மாலையாக நம் கண்களுக்கு விருந்தளிக்கப் போகிறது.
புதன், வெள்ளி, வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன்
இந்த அணிவகுப்பில் புதன், வெள்ளி, வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்கள் ஒன்றுடன் ஒன்று கைகோக்கின்றன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இரவு வானத்தின் ராணியாகக் கருதப்படும் “வெள்ளி’ கோள், மற்ற கோள்களை விட அதிக பிரகாசத்துடன் ஒரு வைரத் துகள் போல மின்னும்.
அதே சமயம், சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான ‘வியாழன்’, வானின் உச்சியில் இருந்து கம்பீரமாக இந்த அணிவகுப்பை வழிநடத்தும். சூரியன் மறைந்த பிறகு வரும் அந்திப் பொழுதில், மேற்குத் திசையில் அடிவானத்திற்குச் சற்று மேலே பார்த்தால், இந்த கிரகங்களின் ஊர்வலத்தை நீங்கள் பார்க்கலாம்.
அறிவியல் ரீதியாகப் பார்த்தால், இந்தக் கோள்கள் உண்மையில் விண்வெளியில் ஒரே வரிசையில் நிற்பதில்லை. அவை ஒவ்வொன்றும் சூரியனை வெவ்வேறு வேகத்தில், வெவ்வேறு பாதைகளில் சுற்றிக்கொண்டிருக்கின்றன.