விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 275 வாக்குச் சாவடிகளில் 57 இடங்களில் பாமக முதலிடத்தையும், 45 இடங்களில் நாம் தமிழர் கட்சி இரண்டாம் இடத்தையும் பிடித்திருந்தன.
நடந்து முடிந்த விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற்று, தனது காப்புத் தொகையை காப்பாற்றிக் கொண்டார். 3-வது இடம் வந்த நாதக வேட்பாளர் அபிநயா 10,602 வாக்குகள் பெற்று காப்புத் தொகையை இழந்தார். இந்தத் தேர்தலில் மொத்தம் 275 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தாங்களே முன்னிலை பெற வேண்டும் என திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. இதற்காகவே 25 அமைச்சர்கள் அதிகாரபூர்வமற்ற நிலையில் தொகுதிக்குள் ஊடுருவி இருந்தார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ‘3 சி’ முதல் ‘5 சி’ வரை வரவு செலவு செய்ய வாய்மொழி உத்தரவுகள் பறந்தன. அதனால், அத்தனை அமைச்சர்களும் தங்களது மாவட்டத்திலிருந்து கட்சி நிர்வாகிகளை அழைத்து வந்து விக்கிரவாண்டியில் முகாம் போட்டுக்கொண்டு கரன்சி மழை பொழிந்தார்கள்.
ஆளும் கட்சி இத்தனை ‘கவனிப்பு மேளா’க்களை நடத்தியும் 57 வாக்குச் சாவடிகளில் திமுகவை பின்னுக்குத் தள்ளி பாமக முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல் 45 வாக்குச் சாவடிகளில் பாமகவை பின்னுக்கு தள்ளிவிட்டு நாம் தமிழர் கட்சி இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது. பாமக முதலிடம் பிடித்த வாக்குச் சாவடிகளில் இரண்டாமிடத்தை திமுகவே பெற்றுள்ளது. அதேசமயம் எந்த வாக்குசாவடியிலும் நாதக முதலிடம் பிடிக்கவில்லை. இரண்டாமிடம் பிடிப்பதில் பாமகவுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தான் போட்டி இருந்துள்ளது.