அகழாய்வில் தமிழ் எழுத்துடன் பானை ஓடுகள்

Dinamani2f2024 072f898e4756 8623 4275 8fdd B91579f7e6032fchennanur20excavation.jpg
Spread the love

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம்,சென்னானூர் அகழாய்வில் தமிழி எழுத்துப்பொறிப்புக்கொண்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சாா்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வுத்தளத்தில் புதிய கற்காலப்பண்பாட்டைக் கண்டறிய அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு உடைந்த நிலையில் புதிய கற்காலக் கருவி கண்டெடுக்கப்பட்டது.

அதனையடுத்து, இடைக்கால வரலாற்றுக் காலத்தைச் சார்ந்ததாகக் கருதப்படும் இரும்பிலான ஏர்க்கலப்பையின் கொழுமுனைக் கிடைக்கப்பெற்றது. இக் கொழுமுனை 1.3 கிலோ எடையும் 32 செ.மீ நீளமும் 3 செ.மீ தடிமனும் கொண்டிருந்தது.

மேலும், சுடுமண் முத்திரை, சங்கு வளையல் துண்டுகள், கண்ணாடி வளையல் துண்டுகள், வட்டச்சில்லுகள், தக்களி ஆகிய சங்க காலம் என்றழைக்கப்படும் தொடக்க வரலாற்றுக் காலத்தைச் சார்ந்த தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

தற்போது, சென்னானூர் அகழாய்வில் 90 செ.மீ முதல் 108 செ.மீ வரையிலான ஆழத்தில் தமிழி எழுத்துப்பொறிக்கப்பட்ட மூன்று பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த பானை ஓடுகளில் முறையே [ந்]தை பாகஅந்,ஊகூர், [சா]த்தன் என பொறிக்கப்பட்டுள்ளன.

பாறைகளில் பொறிக்கப்பட்ட தமிழி எழுத்துக் கல்வெட்டுகளில் வேள்ஊர், மதிரை, இவகுன்றம், நெல்வெளிஇய், இலஞ்சி, கருஊர், முசிறி, வெள்அறைய், தேனூர், அகழ்ஊர், கோகூர் போன்ற ஊர்ப்பெயர்கள் காணப்படுகின்றன. ஆனால் பானை ஓடுகளில் பெரும்பாலும் ஆட்பெயர்கள் இடம்பெற்றுள்ளன. உறையூர் பானை ஓட்டில் மூலனபேடு என்ற ஊர்ப்பெயர் கிடைக்கப்பெற்றது. தற்பொழுது சென்னானூர் பானை ஓட்டில் ஊகூர் என்ற ஊர்ப் பெயர் கிடைக்கப்பெற்றுள்ளது சிறப்பானதாக கருதப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *