தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதற்கு அரசியல் கட்சியினர் கண்டனம்தெரிவித்து வருகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
இது தொடர்பாக அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இருமாப்பில் தமிழக மக்களுக்கு விடியா திமுக அரசின் முதலமைச்சர் மூன்றாவது முறையாக அறிவித்துள்ள மின் கட்டண உயர்வுக்கு கடும் கண்டனம்! 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் மின் கட்டண உயர்வு. தொடர்ந்து 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் இரண்டாம் முறையாக மின் கட்டண உயர்வு.
நாடாளுமன்றத் தேர்தலில் 39-க்கு 39 இடங்களைப் பெற்ற இருமாப்பில், விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் முடிந்தவுடன், நேற்று முதல் தமிழக மக்களின் நெற்றியில் பட்டை நாமத்தைப் போட்டு மூன்றாம் முறையாக 5 சதவீத மின் கட்டண உயர்வை பரிசளித்திருக்கிறார் விடியா திமுக அரசின் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர்.
விண்ணை முட்டும் விலைவாசி உயர்வாலும், 2024, ஏப்ரல் மாதம் முதல் நியாய விலைக் கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு போன்றவைகளை வழங்காமலும் மக்களை துன்பத்திற்குள்ளாக்கிய இந்த ஏமாற்று மாடல் அரசு, மூன்றாம் முறையாக மின்கட்டண உயர்வு என்ற ஒரு பேரிடியை தமிழக மக்களின் தலையில் இறக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நாடக வசனம்
‘சொன்னதைச் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்’ என்று நாடக வசனம் பேசிய திரு. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தவுடன் மின் கட்டணத்தை உயர்த்தி, சொல்லாததையும் செய்துவிட்டார்! விலைவாசி உயர்வு, வரி உயர்வு போன்றவைகளால் மக்களின் கோபம் எரிமலையாக வெடிப்பதற்கு முன்பு, பொதுப் பயன்பாட்டிற்கான மின்கட்டண உயர்வையும், விசைத்தறி மற்றும் சிறு, குறு தொழில்கள், தொழில் நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
தக்க பாடத்தைப் புகட்டுவார்கள்
நம்மை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்ற மமதையில் பொம்மை முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் தலைக்கனத்தோடு செயல்படுவாரேயானால், கொதிப்படைந்துள்ள தமிழக மக்கள், விடியா திமுக ஆட்சிக்கு தக்க பாடத்தைப் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பட்ஜெட்டுக்கு முந்தைய ‘ஹல்வா’ விழாவில் நிர்மலா சீதாராமன்