வங்கதேசம்:
வங்க தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் 1971-ம் ஆண்டுஉயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.அப்போது போலீசார் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணி
இதனால் மாணவர்களின் கோபம் ஆட்சியாளர்கள் மீது திரும்பியது. அவர்கள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்த போது ஏற்பட்ட கலவரத்தல் 100&க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வங்கதேசம் நாடுமுழுவதும் போராட்டம் கொளுந்துவிட்டு எரிந்தது.
இந்த நிலையில் இன்று மீண்டும் போராட்டம் தீவிரம் அடைந்தது.பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், வங்கதேச தலைநகர் டாக்காவின் மத்திய சதுக்கத்தில் குவியத் தொடங்கினர். அவர்கள் பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.
பிரதமர் ஷேக் ஹசீனா
இதனால் நிலைமை கட்டுப்பாட்டை மீறி சென்றதை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா இன்று மதியம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வங்கதேசத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு ராணுவ விமானத்தில் தனது சகோதரி ஹேக் ரேஹானாவுடன் நாட்டில் இருந்து வெளியேறினார்.
பிரதமர் மாளிகையான கனபாபனில் இருந்து புறப்பட்ட அவர்களது விமானம் புதுடெல்லி அருகே ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. அவர்கள் அங்கிருந்து இங்கிலாந்து செல்ல உள்ளதாகவும், இங்கிலாந்து அரசிடம் ஷேக் ஹசீனா தஞ்சம் கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.ஷேக் ரேஹானா இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்றும் எனவே, அவரோடு ஷேக் ஹசீனா லண்டலின் தங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொருட்களை அள்ளிச்சென்றனர்
பிரதமர் அலுவலகம் மற்றும் ஹசீனாவின் அதிகாரப்பூர்வ இல்லமான கணபாபனுக்குள் புகுந்த கலவரக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை அள்ளிச்சென்றனர். இதேபோல் பாராளுமன்ற கட்டிடத்திற்குள்ளும் புகுந்து எம்.பிக்கள் இருக்கையில் அமர்ந்து அவர்கள் மகிழ்ந்தனர். தொடர்ந்து வங்கதேசத்தில் பதட்டமான சூழ்நிலையே நிலவி வருகிறது.
ராணுவத் தலைமை தளபதி
இதற்கிடையே நாட்டின் முழு பொறுப்பையும் தான் ஏற்பதாக தலைமை ராணுவத் தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்தெரிவித்தார். வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்படும். தயவு செய்து ராணுவத்தின் மீது நம்பிக்கை வையுங்கள், உங்களின் அனைத்து கோரிக்கைகளையும் நாங்கள் கவனித்து நாட்டில் அமைதியை நிலைநாட்டுவோம்.
நீங்கள் எங்களுடன் ஒத்துழைத்தால் ஒழுங்கை மீட்டெடுப்போம். தயவுசெய்து எனக்கு உதவுங்கள், இந்த சட்டவிரோதம் மற்றும் வன்முறை மூலம் எதையும் சாதிக்க முடியாதுஎன்று தலைமை தளபதி தெரிவித்துள்ளார். ராணுவத்தின் தலைமை தளபதியாக வாக்கர் உஸ் ஜமான் கடந்த ஜூன் மாதம்தான் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடிக்கு விளக்கம்
அண்டை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்டு உள்ள உள்நாட்டு குழப்பை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியானது தொடர்பாகவும், வங்க தேசத்தில் ஏற்பட்டு உள்ள குழப்பங்கள், கலவரம் தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பிரதமர் மோடிக்கு இன்று விளக்கினார். இதைத்தொடர்ந்து இந்தியா எடுக்கவேண்டி எடுக்க வேண்டிய அடுத்த கட்ட ராஜதந்திர நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
எல்லைப் பாதுகாப்புப் படை
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து வெளியேறியதைத் தொடர்ந்து, நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், இந்தியாவில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) 4,096 கிமீ இந்தியா-வங்காளதேச எல்லையில் உள்ள அனைத்துப் பிரிவுகளுக்கும் ‘உயர் எச்சரிக்கை’ கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தால் இந்தியாவில் இருந்து டாக்காவுக்கு விமான சேவையை ஏர்இந்தியா, ஏர் இந்தியா நிறுவனங்கள் ரத்து செய்து உள்ளது.வங்கதேசத்திற்கான அனைத்து ரெயில்களையும் இந்தியா ரத்து செய்துள்ளதாக இந்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். டாக்காவின் ஷாஜலால் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஜூலையில் இருந்து இதுவரையிலான போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 300-ஐ கடந்ததும் குறிப்பிடத்தக்கது.