புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை (அக்டோபர் 20) வாரணாசிக்கு பயணம் மேற்கொள்கிறார். பிற்பகல் 2 மணியளவில் ஆர்.ஜே.சங்கரா கண் மருத்துவமனையை அவர் திறந்து வைக்கிறார். அதன்பிறகு, மாலை 4:15 மணியளவில், வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.
ஆர்.ஜே. சங்கரா கண் மருத்துவமனை கண் தொடர்பான பல்வேறு நோய்களுக்கு விரிவான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்கும். இந்த நிகழ்ச்சியில்பிரதமர் நரேந்திர மோடி அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றுவார்.
தர்பங்கா விமான நிலையம்
இணைப்பை ஊக்குவிப்பதற்கான தமது உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம், வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடம் மற்றும் தொடர்புடைய பணிகளை மேற்கொள்ள ரூ.2870 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். ஆக்ரா விமான நிலையத்தில் ரூ.570 கோடி மதிப்பிலும், தர்பங்கா விமான நிலையத்தில் ரூ.910 கோடி மதிப்பிலும், பாக்தோக்ரா விமான நிலையத்தில் ரூ.1550 கோடி மதிப்பிலும் புதிய சிவில் என்க்ளேவ் கட்டுவதற்கும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
ரேவா விமான நிலையம், மா மகாமாயா விமான நிலையம், அம்பிகாபூர் மற்றும் சர்சவா விமான நிலையங்களில் ரூ. 220 கோடி மதிப்பிலான புதிய முனையக் கட்டிடங்களையும் பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த விமான நிலையங்களின் ஒருங்கிணைந்த பயணிகள் கையாளும் திறன் ஆண்டுக்கு 2.3 கோடிக்கும் மேலாக அதிகரிக்கும். இந்த விமான நிலையங்களின் வடிவமைப்புகள் இப்பகுதியின் பாரம்பரிய கட்டமைப்புகளின் பொதுவான கூறுகளிலிருந்து பெறப்பட்டவை.
விளையாட்டுத் துறைக்கு உயர்தர உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற தமது தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, விளையாடு இந்தியா திட்டம் மற்றும் பொலிவுறு நகரங்கள் இயக்கத்தின் கீழ் ரூ. 210 கோடி மதிப்பிலான வாரணாசி விளையாட்டு வளாகத்தின் மறுமேம்பாட்டுப் பணிகளின் 2 மற்றும் 3-வது கட்டப் பணிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
விடுதி
தேசிய சிறப்பு மையம், வீரர்கள் விடுதிகள், விளையாட்டு அறிவியல் மையம், பல்வேறு விளையாட்டுகளுக்கான பயிற்சி மைதானங்கள், உள்ளரங்க துப்பாக்கி சுடும் தளங்கள், சண்டை விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அதிநவீன விளையாட்டு வளாகத்தை உருவாக்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. லால்பூரில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் விளையாட்டு அரங்கத்தில் 100 படுக்கைகள் கொண்ட மாணவ மாணவியர் மற்றும் சிறார் விடுதிகளையும், பொது அரங்கையும் அவர் திறந்து வைக்கிறார்.
சாரநாத்தில் புத்தமதம் தொடர்பான பகுதிகளின் சுற்றுலா மேம்பாட்டு பணிகளை பிரதமர் தொடங்கி வைப்பார். இந்த மேம்பாட்டு பணிகளில் பாதசாரிகளுக்கு ஏற்ற தெருக்களை நிர்மாணித்தல், புதிய கழிவுநீர் குழாய்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வடிகால் அமைப்பு, உள்ளூர் கைவினைப் பொருட்கள் விற்பனையாளர்களை ஊக்குவிக்க நவீன விற்பனை மண்டலம் ஆகியவை அடங்கும்.
பாணாசூர் கோயில் மற்றும் குருதம் கோயிலில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள், பூங்காக்களை அழகுபடுத்துதல் மற்றும் மறுமேம்பாடு செய்தல் போன்ற பல்வேறு முன்முயற்சிகளையும் பிரதமர் தொடங்கி வைப்பார்.