Putin: "காந்தி உலகம் முழுமைக்குமான சிந்தனையாளர்" – புதின் கைப்பட எழுதிய குறிப்பு!

Spread the love

23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சிமாநாட்டை முன்னிட்டு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக டெல்லி வருகையின்போது ராஜ் காட்டில் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் தேசத் தந்தையாகப் போற்றப்படும் மகாத்மா காந்தியின் அமைதி மற்றும் அகிம்சை கொள்கைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ரஷ்ய அதிபர் மலர் வளையம் வைத்து மௌன அஞ்சலி செலுத்தினார்.

putin's note about gandhi
putin’s note about gandhi

ராஜ் காட்டிலிருந்து விடுபெறும் முன்னர் பார்வையாளர்கள் புத்தகத்தில் நெகிழ்ச்சியான குறிப்பை விட்டுச் சென்றுள்ளார் புதின். அதில் உலக அளவில் தலைமைத்துவம் மற்றும் தார்மீக தத்துவத்தில் காந்தியின் தாக்கத்தை அங்கீகரித்துள்ளார்.

Putin எழுதியது என்ன?

மகாத்மா காந்தியை நவீன இந்தியாவின் முக்கிய நிறுவனர்களில் ஒருவராகவும், உலகம் முழுவதுக்கும் பொருத்தமான சிந்தனையாளர்களில் ஒருவராகவும் புதின் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரம், இரக்கம் மற்றும் சேவை குறித்த காந்தியின் கருத்துக்கள் கண்டங்கள் கடந்து, உலகின் சமூகங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிப்பதாகவும், காந்திய கொள்கைகள் அவர் கற்பனை செய்ததைப் போலவே மிகவும் நியாயமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய உலக ஒழுங்கை உருவாக்க பயன்படுவதாகவும் தனது செய்தியில் எழுதியுள்ளார் புதின்.

Putin in India
Putin in India

காந்தி, ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கு எழுதிய கடிதங்களை நினைவுகூர்ந்துள்ளார் புதின். அந்த கடிதங்களில் இருந்த உலகின் எதிர்காலம், சுதந்திரத்தின் முக்கியத்துவம் மற்றும் மக்களின் கண்ணியம் பற்றிய கருத்துகள் – ரஷ்யாவும் இந்தியாவும் மதிக்கும் கொள்கைகளுடன் நெருக்கமாக ஒத்துப் போவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகத் தலைவர்கள் இந்தியா வருகையின்போது ராஜ் காட்டில் காந்தியின் நினைவை கௌரவிப்பது பாரம்பரியமாக நடந்து வருகிறது.

அமைதி, ஒற்றுமை மற்றும் தார்மீகப் பொறுப்பை வலியுறுத்தும் காந்தியின் போதனைகள் இன்றளவும் பொருத்தமானதாக இருப்பதை நினைவூட்டுவதாக இது அமைந்துள்ளது.

இந்தியாவும் ரஷ்யாவும் உத்தி சார்ந்த கூட்டுறவில் நீண்டநாட்கள் நிலைத்திருக்கும் சூழலில் இந்தப் பாரம்பரிய அஞ்சலி இரு நாடுகளும் கலாசார மற்றும் தத்துவார்த்த பிணைப்புகளையும் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *