‘கதறும் ராமதாஸ்.. குளுகுளு ஏற்காட்டில் அன்புமணி..’
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “அதிகாரப்பூர்வமாக கட்சி அன்புமணியின் கையில் இருக்கிறது. ஒரு பகுதியில் 100 வாக்குகள் பா.ம.க-வுக்கு இருக்கிறது என்றால், அதில் 20 முதல் 25% வாக்குகள் ராமதாஸுக்கு கிடைக்கும். மற்றவர்கள் அன்புமணிக்குத்தான் வாக்களிப்பார்கள். இவ்வாறு கட்சி அன்புமணியிடம் சென்றபிறகு நியாயம் இல்லை, தர்மம் இல்லை என ராமதாஸ் கதறிக்கொண்டு இருக்கிறார். காலம் கடந்த பின்பு டாக்டர் ராமதாஸ் யோசித்து பயனில்லை. அதேநேரத்தில் தந்தை இப்படி கதறிக்கொண்டிருக்கும்போது மகன் அன்புமணி ஏற்காட்டில் மனைவியுடன் இருக்கிறார். அங்கிருந்து மகிழ்ச்சியுடன் அப்பாவின் கதறலை ரசித்துக்கொண்டிருக்கிறார். அதேநேரத்தில் இருவருக்கும் இடையிலான பிரச்னை இனி பெரிதாகாது. டெல்லி பா.ஜ.க தலைமை விரைவில் சமாதானம் செய்துவிடும். அதற்கான வேலைகளை அவர்கள் தொடங்கிவிட்டார்கள்” என்றார்.

இதுகுறித்து ராமதாஸின் ஆதரவாளர் அருளிடம் விளக்கம் கேட்டோம், “தேர்தல் ஆணையம் கட்சித் திருட்டுக்கு துணை போய்விட்டது. அனைத்து ஆவணங்களையும் கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்றத்தில் எங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார் சுருக்கமாக.
இதுகுறித்து விளக்கம் பெறுவதற்காக அன்புமணியின் ஆதரவாளர் சதாசிவத்தை தொடர்பு கொண்டபோது, “நான் மீட்டிங்கில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன்” என்றார். அதன் பிறகு அவர் தொடர்பு கொள்ளவில்லை. அவர் தனது கருத்தை தெரிவிக்கும்பட்சத்தில், உரிய பரிசீலனைக்கு பிறகு பிரசுரிக்கப்படும்!