‘ரியல் எஸ்டேட் முதலாளிக்காக பேருந்து நிலையத்தை மாத்துறாங்க!’ – ஆத்திரப்படும் மக்கள்…

1339884.jpg
Spread the love

 

ராசிபுரம் நகரின் மையப் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தை நகருக்கு வெளியே 7 கி.மீ தள்ளி அணைப்பாளையத்திற்கு மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்து காரியத்தில் இறங்கியுள்ளது. இதையொட்டி ஏகத்துக்கும் அங்கே சர்ச்சைகள் வெடித்து மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்படுவதை தடுப்பதற்காக ‘ராசிபுரம் மக்கள் நலக்குழு’ என்ற அமைப்பை ஏற்படுத்தி கடையடைப்பு, உண்ணாவிரதம் என போராடி வரும் அவர்கள், நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்துள்ளனர்.

பேருந்து நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தின் அருகே சேலத்தைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவன உரிமை யாளருக்குச் சொந்தமான இடம் உள்ளது. பல ஆண்டுகளாக இந்த இடத்தை யாரும் வாங்க முன்வரவில்லை. இச்சூழலில் ஆளுங்கட்சியினர் சிலர் இதில் தலையிட்டு ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் ஆதாயம் பெற்றுக் கொண்டு பேருந்து நிலையத்தை இங்கு மாற்றவைத்ததாக குற்றம் சாட்டுகிறார்கள்.

பேருந்து நிலைய விவகாரம் தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடந்த போதும் தொகுதி எம்எல்ஏ-வும் அமைச்சருமான டாக்டர் மதிவேந்தன் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாக ராசிபுரம் மக்கள் நலக்குழுவினர் ஆதங்கப்படுகிறார்கள் இதுகுறித்து நம்மிடம் பேசிய அக்குழுவின் செயலாளர் நல்வினைச் செல்வன், “பேருந்து நிலையத்தை மையப்படுத்தித்தான் நகர வர்த்தம் உள்ளது. பேருந்து நிலையத்தை 7 கி.மீ, தூரத்துக்கு அப்பால் கொண்டு போனால் வர்த்தம் முற்றிலும் முடங்கும். அதுவுமில்லாமல் பேருந்து நிலையத்துக்காக தேர்வுசெய்யப்பட்ட இடம் நீர் நிலை புறம்போக்கு. சேலம் ரியல் எஸ்டேட் நிறுவனம் அப்பகுதியில் லே அவுட் போட்டுள்ளது.

அந்த இடத்துக்காக இந்த நீர்வழிப்பாதை அடைக்கப்பட்டுள்ளது. அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்குச் சொந்தமான இடம் 200 ஏக்கர். அங்கு கடந்த 20 ஆண்டுகளாக யாரும் வீடுகட்டவில்லை. இந்த நிலையில், அணைப்பாளையம் ஏரி அருகில் 7 ஏக்கர் 3 சென்ட் நிலத்தை ரியல் எஸ்டேட் நிறுவனம் பேருந்து நிலையத்துக்காக நகராட்சிக்கு தானமாக வழங்கியுள்ளது. இப்போது இங்கு பேருந்து நிலையம் வரப்போகிறது என்றதும் ஒட்டுமொத்த 193 ஏக்கர் நிலத்தின் மதிப்பும் எகிறியுள்ளது. இதை முடித்துக் கொடுத்ததற்காக ஆளும் கட்சியினர் வெயிட்டாக ஆதாயம் பார்த்திருக்கிறார்கள்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் மதிவேந்தனுக்கு 2 மாதங்களுக்கு முன்பே கடிதம் எழுதினோம். அதற்கு இதுவரை அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை” என்றார். இதுதொடர்பாக அமைச்சர் மதிவேந்தன் தரப்பு விளக்கம் கேட்ட அவரை மொபைலில் பலமுறை தொடர்பு கொண்டோம். ஏனோ அவர் நமது அழைப்பை எடுக்கவில்லை. இத்தனை மக்கள் ஒரு பிரச்சினைக்காக போராட்டம் நடத்தும் போது தொகுதியில் அமைச்சராக இருப்பவர் அதைக் கண்டும் காணாமல் கடந்து போவது எப்படி சரியாக இருக்க முடியும்?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *