திருமணம் என்றாலே உறவினர்கள் பணத்தை தண்ணீராக செலவு செய்வார்கள். பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் என்ற இடத்தில் நடந்த திருமணத்தில் உறவினர்கள் மணமகள் மீது பணமழை பொழிந்த வீடியோ வைரலாகி இருக்கிறது.
திருமணத்தில் உறவினர்கள் ஆடல், பாடலுடன் உற்சாகமாக இருந்தனர். அந்நேரம் மணப்பெண் மீது உறவினர்கள் பணத்தை மழையாக பொழிந்தனர். இதனால் மணப்பெண் நின்ற இடத்தில் தரை முழுக்க பணமாக கொட்டிக்கிடந்தது. மணப்பெண்ணின் உறவினர்கள் அனைவரும் மணப்பெண் மீது பணத்தை மேல் நோக்கி தூக்கிப்போட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் வைரலானது.
இத்திருமணத்தில் ரூ.8.5 கோடி பணம் மணப்பெண் மீது மழையாக பொழியப்பட்டது என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் இச்செய்தியை மணமகன் வீட்டார் மறுத்துள்ளனர். இது குறித்து மணமகனின் சகோதரர் சிக்கந்தர் சிங் வெளியிட்டுள்ள விளக்கத்தில்,”‘ மணப்பெண் மீது பணமழை பொழிந்தது உண்மைதான். ஆனால் சமூக வலைத்தளதில் குறிப்பிடுவது போன்று அந்த அளவுக்கு பணம் பயன்படுத்தப்படவில்லை.
எனது சகோதரர் ஆஸ்திரேலியாவில் லாரி பிஸ்னஸ் செய்கிறார். எனவே திருமணத்தில் பணமழை பொழிந்தோம். ஆனால் சமூக வலைத்தளத்தில் குறிப்பிடுவது போன்று இதற்கு கோடிக்கணக்கான பணம் பயன்படுத்தப்படவில்லை. வெறும் ரூ.2 லட்சம் மட்டும்தான் பயன்படுத்தினோம்” என்று குறிப்பிட்டார்.
திருமண ஒருங்கிணைப்பு மேலாளர் இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், ”மணமகள் மீது ரூ. 8.5 கோடி பணம் போடப்படவில்லை. வெளிநாட்டு டாலர் உட்பட மொத்தம் ரூ.4 லட்சம் தான் இதற்காக பயன்படுத்தப்பட்டது. எப்படி இதற்கு கோடிக்கணக்கில் செலவிடப்பட்டது என்று செய்தி வெளியானது என்று தெரியவில்லை””என்றார்.
மணமகள் குடும்பம் தரப்பில் விளக்கம் கொடுத்துள்ள போதிலும் மணமகள் மீது பணமழை பொழிந்த வீடியோ தொடர்ந்து வைரலாகி வருகிறது.