தைபூசத் திருவிழா, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும் ஆண்டு தோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு தைப்பூசத் திருவிழா, நாளை பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறுகிறது. தைப்பூசத் திருவிழாவிற்காக அறுபடை வீடுகளில் உள்ள முருகன் கோயில்களுக்கு பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரதம் மேற்கொண்டு, பாதயாத்திரையாகச் செல்வார்கள்.
தென் மாவட்டங்களைப் பொறுத்த வரையில் பழனி மற்றும் திருச்செந்தூர் கோயில்களுக்கு பாதயாத்திரையாகச் செல்வார்கள். இந்த நிலையில், நெல்லை, பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகர் அருகிலுள்ள புனித மிக்கேல் அதிதூதர் கிறிஸ்தவ தேவாலயத்தில் முருக பக்தர்கள் ஓய்வெடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாதயாத்திரை முருக பக்தர்களிடம் பேசினோம், “வைகாசி விசாகத் திருவிழாவை விட தைப்பூசத் திருவிழாவிற்கு முருக பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் பாதயாத்திரையாக நடந்து செல்வோம். நாங்கள், பாபநாசம், அம்பாசமுத்திரம் சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள ஊர்களில் இருந்து குடும்பமாக, குழுக்களாக இணைந்து நடந்து வருகிறோம். தினமும் காலை 6 மணிக்கு நடக்கத் தொடங்கினால் மதியம் 12 மணி வரை நடந்துவிட்டு வெயில் தணியும் வரை ஆங்காங்கே உள்ள மரத்தடிகள், சாவடிகள், மண்டபங்களில் ஓய்வெடுப்போம்.